பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

குமரியின் மூக்குத்தி

 . சம்பாதித்துக்கொண்டே இருக்கிறாய், பிறகு' என்று அம்மா கேட்பாள்.

'பிறகு என்ன? அப்படியே வாழ்கிறது.” '

ஆண்துணை வேண்டாமோ?

'உலகத்து மக்களெல்லாம் துணையாக இருக்கிறார்களே.'

'போடி பைத்தியம்! யாராவது கேட்டால் சிரிப்பார்கள். ஒர் ஆடவன் துணை வேண்டாமாம், ஊராரெல்லாம் துணையாக இருக்க வேண்டுமாம் ! கன்னியாகவே காலம் கழித்து விட்டால் உடம்பு தளரும்போது யார் உதவி செய்வார்கள்?

‘அண்ணன், தம்பி இல்லையா?”

"அவரவர்கள் குடும்பம் என்று ஏற்பட்டால் உன்னை யார் கவனிப்பார்கள்?

ஆடவர்களை யார் கவனிக்கிறார்கள்?

"அவர்களுக்குப் பெண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்; கவனித்துக் கொள்ளுகிறார்கள்.”

கல்யாணி சிறிது மெளனமானாள். தானும் ஆடவர்களைப் போல இருந்து உத்தியோகம் செய்ய வேண்டு மென்று அவளுக்கு ஆசை. ஆடவர்களை எதிர்பாராமல் தன் சொந்த உழைப்பாலே வாழ வேண்டும், அதுதான் சுதந்தர வாழ்வு என்று எண்ணினாள். ஆனால் ஆடவர்கள் கல்யாணம் பண்ணிைக்கொள்கிறார்கள்; பிள்ளைகுட்டி பெறுகிறார்கள்; முதுமைப் பிராயத்தில் பிள்ளைகள் அவர்களைக் காப்பாற்றுகிறார்கள். பெண்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டால்தான் உடனே அடிமையாகி விடுகிறார்களே!

இதை நினைக்கும்போது அவளுக்கு ஆடவர் உலகத்தின்மேல் கோபம் கோபமாக வந்தது. "எல்லோரும் சுயநலப் புலிகள்' என்று முணுமுணுத்தாள். அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தாள்.