பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

குயிலும் சாரலும்

தந்தை சின்னக் குயிலியை நெட்டைக் குரங்கனுக்குக் கட்டிக் கொடுக்க முடிவு செய்கிறான். இதை யறிந்த மாடன் குயிலியிடம் வந்து சினம் பேசுகிறான். அப்போது குயிலி,

கட்டாயமாக நான் நெட்டைக் குரங்கனுக்கு மாலையிட்டாலும், மூன்று மாதத்தில் பேதம் விளைவித்து வந்து விடுவேன்; மீண்டும் உனக்கே மனைவியாக வருவேன் என்று சொல்கிறது. இதுவும் காதலினால் இல்லை; இரக்கத்தால் என்கிறார்.

கடைசியில் சேர இளவரசனையே காதலிக்கிறாள் சின்னக் குயிலி.

மாடனிடம் காதல் இல்லாமலே மணம் புரியச் சம்மதிக்கிறாள். நெட்டைக் குரங்கனைக் கட்டிக் கொண்டு, அவனோடு சிலநாள் வாழ்ந்துவிட்டு மீண்டும் தான் காதலிக்காத மாடனிடம் வந்து விடுவதாகக் கூறுகிறாள். கடைசியில் இளவரசனைக் கண்டதும் காதல் கொண்டு அவனைக் கூடுகிறாள். இங்கே சின்னக் குயிலியின் செயல்-காதல்-எந்தப் பண்பாட்டின் அடிப்படை என்பது விளங்கவில்லை.

மாலையழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி

என்று இந்தக் கனவுக் கதையைக் கூறும் பாரதியார், இந்தக் காதல் கதையின் மூலம் எதைக் கூற வருகிறார். உண்மையான காதலையா? தெய்வீகக் காதல் என்பது இப்படித்தான் இருக்குமா? எல்லாம் புரியாத புதிராய் இருக்கிறது. மனம் போன போக்கில் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்.

கண்டது காட்சி; கொண்டது கோலம் என்று சொல்லுவார்களே அந்தப் போக்கில் அமைந்துள்ளது குயிலின் காதல் கதை. அதன் முற்பிறப்புக் கதையோ இன்னும் மோசமாக இருக்கிறது.