பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இலை

21


[சவுக்கு பப்பாளி மருதோன்றி பனை அருநெல்லி கொன்றை மந்தாரை வேப்பிலை]

பலவகை இலைகள்

-வற்றின் இலைகளின் ஓரம் பல்பல்லாகப் பிளவுபட்டிருக்கும். சவுக்கு மரத்தின் இலைகள் ஊசியைப் போல மிக மெல்லியதாக இருக்கும். வாழை இலை மிகப் பெரியது. புளியமர இலைகள் மிகச் சிறியவை.

இலைகள் பெரும்பாலும் பச்சை நிறமாக இருக்கும். ஏன் தெரியுமா? இலைகளில் பச்சையம் (Chlorophyll) என்ற ஒரு பொருள் இருக்கிறது. இதுதான் இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. சில இலைகள் சிவப்பாகவோ, மஞ்சளாகவோ இருக்கும். அவ்விலைகளிலும் பச்சையம் இருக்கிறது.

இலைகள் காம்புகளால் செடியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு செடியின் காம்பிலும் ஒவ்வொரு விதமாக இலைகள் முளைத்திருக்கும். படத்தில் சில இலைக்காம்புகளைக் காணலாம். ஒரு காம்பில் இலைகள் எதிர்எதிராக உள்ளன; மற்றொன்றில் இலைகள் மாறிமாறியுள்ளன; மற்றொன்றில் காம்பைச் சுற்றி இலைகள் முளைத்துள்ளன.

புதிதாகத் துளிர்க்கும் இலைக்குக் கொழுந்து என்றும் தளிர் என்றும் பெயர். சிறுகொழுந்து விரிந்து வளர்ந்து பெரிய இலை ஆகின்றது. இலை முதிர்ந்து, பழுப்பாக மாறிவிடும். பழுப்பு இலைகள் கீழே உதிர்த்துவிடும், சில மரங்களில் இலைகள் எப்போதும் துளிர்த்துக்கொண்டே இருக்கும். சிலவற்றின் இலைகள் ஆண்டுக்கொருமுறை துளிர்க்கும். ஓராண்டில் இரு முறை, மும்முறை, நான்கு முறை துளிர்க்கும் மரங்களும் உண்டு.

ஏதேனும் ஓர் இலையைக் கிள்ளி எடுத்து அதைக் கூர்ந்து நோக்குங்கள். நடுவில் ஒரு பெரிய நரம்பு ஓடுகிறதல்லவா? அதன் பக்கத்தில் பல நரம்புகள் ஓடுவதையும் காணலாம். ஒவ்வொரு வகைச் செடியின் இலையிலும் ஒவ்வொரு விதமாக நரம்புகள் ஓடும். நரம்புகள் யாவும் மிகமிக நுட்பமான குழாய்கள். இவற்றின் மூலந்தான் செடியின் வேரிலிருந்து வரும் நீர் செடி முழுவதற்கும் பரவுகின்றது. செடிக்கு நாம் ஊற்றும் இந்த நீரில் மண்வளம் நிறைந்து பல சத்துகளும் இருக்கும். ஆகவே நீர் செடிக்கு நல்ல சத்து நிறைந்த உணவாகிறது.

நாம் சுவாசிக்காவிடில் உயிர்வாழ முடியாது; உணவு உண்ணாவிட்டாலும் உயிர்வாழ முடியாது. இதைப் போலவே மரம், செடி, கொடிகளும் சுவாசிக்க வேண்டும்; உணவு உட்கொள்ள வேண்டும். இதற்கு உதவி செய்பவை இலைகளே யாகும்.

இலையின் மேல் சூரிய ஒளி படுகிறது. இலையின் அடிப்புறத்தில் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய துளைகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இவற்றின் மூலம் காற்று இலைக்குள் நுழைகிறது. இலையிலுள்ள பச்சையம், இலையினுள் புகும் காற்றிலிருந்து கார்பன் டையாக் சைடைப் பிரித்து எடுக்கின்றது. பிறகு அதை வேரிலிருந்து வரும் நீருடன் கலக்கின்றது. இந்தக் கலவையிலிருந்து செடியின் வளர்ச்சிக்குத் தேவையான சர்க்கரையும், மாச்சத்தும் கிடைக்கின்றன. இலையினுள் புகுந்த காற்றில் மிகுந்துள்ள ஆக்சிஜன் அதே துளைகள் மூலம் வெளியேறிவிடுகிறது. இவ்வாறு தாவரத்திற்கு உணவு கிடைக்கிறது. தாவரத்தின்-

இலையின் உள்ளமைப்பு புறமேல் தோல் நரம்பின் குறுக்குவெட்டுத் தோற்றம் இலைத் துளை