பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உடலியல் - உடற்பயிற்சி

31

இடுக்கில் அழுக்கு இருந்தால் அது நாம் உண்ணும் உணவில் கலந்துவிடும். எப்பொழுதும் உண்ணும் முன் கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்..

உடற்பயிற்சியும் (த.க.) சுத்தமான காற்றும் உடலுக்கு இன்றியமையாதன. நாளும் உடற்பயிற்சி செய்வதால் உடல் வியர்த்து, வியர்வை மூலம் அழுக்கு நீங்கும். தசைகள் வலுவடையும். உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்யும், உழைக்கும் உடலுக்கு ஓய்வு தேவை. நாள்தோறும் போதுமான அளவு உறங்கவும் வேண்டும். உறங்கும்பொழுது உடலில் பழுதடைந்த உயிரணுக்கள் சீராகின்றன. பெரியவர்களுக்கு எட்டுமணி நேரம் உறக்கம் தேவை. குழந்தைகள் இன்னும் அதிக நேரம் உறங்க வேண்டும். போதிய உறக்கம் இல்லாவிட்டால் களைப்பு உண்டாகும்; எளிதில் நோய் பீடிக்கும்.

உட்காரும்போதும் நிற்கும்போதும் தலையும் முதுகும் நிமிர்ந்தே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுவாசம் ஒழுங்காக நடைபெறும். உறுப்புகள் சரியாக வேலை செய்யும். கூனியிருப்பவர்கள் விரைவில் களைப்படைவார்கள்.

வரம்பு கடந்து வேலை செய்வதால் நோயை எதிர்க்கும் சக்தி குறையலாம். வேலை செய்தபின் விளையாட்டுகளில் ஈடுபடுதல் நலம். உள்ளத்திற்கும் அமைதி அவசியம். கவலையும் அச்சமும் உடல் நலனைக் கெடுக்கும். மகிழ்ச்சியும் சிரிப்பும் உடல்நலத்தைப் பாதுகாக்கும்.

நாம் வாழ்கின்ற வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் சுகம் தரும். உடல் நலம் பேணுவதற்கான குறிப்புகளைக் கவனத்துடன் கடைப்பிடித்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.


உடலியல்: நாம் நாள்தோறும் சாப்பிடுகிறோம். நாம் வாழ உணவு தேவைப்படுகிறது. விளையாடுவதற்கும் வேலை செய்வதற்கும் வேண்டிய சக்தியை உணவு நமக்குக் கொடுக்கிறது. உணவைச் சக்தியாக மாற்ற உடல் உறுப்புகள் சில வேலை செய்கின்றன. இதுபோல் சுவாசித்தல், பார்த்தல், கேட்டல், சுவைத்தல் போன்ற செயல்களுக்கும் நம் உடலின் பல்வேறு உறுப்புகள் வேலை செய்கின்றன. உடல் உறுப்புகளைப் பற்றிய அறிவே உடலியல் ஆகும்.

நம் உடலின் உறுப்புகள் யாவும் உயிரணுக்கள் (த.க.) என்னும் மிக நுண்ணிய தனித்தனித் துணுக்குகளாலும், பல உயிரணுக்கள் சேர்ந்த திசுக்களாலும் (த.க.) ஆனவை. இவை நலமாக இருக்கும்பொழுது உறுப்புகள் தத்தம் வேலைகளை ஒழுங்காகச் செய்து வருகின்றன.

நோயுறும்போது உறுப்புகள் அவ்வாறு ஒழுங்காகச் செயல்படுவதில்லை. இதை அறிந்து அவற்றைக் குணமாக்கத் தகுந்த சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டும். இதற்கு உடலியலைப் பற்றிய அறிவு துணை செய்கிறது.

விலங்குகளின் உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை ஆராய்வதற்கு 'விலங்கு உடலியல்' என்று பெயர். தாவரங்களின் உயிரணுக்கள் செயல்படுவதை உணர்த்தும் விஞ்ஞானத்திற்குத் ’தாவர உடலியல்' என்று பெயர்.

மனித உடலியலைப் பற்றி இன்னும் எவ்வளவோ உண்மைகள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக அறிஞர்கள் தொடர்ந்து சோதனைகள் செய்துவருகிறார்கள். எலி, முயல், நாய் போன்ற பிராணிகளின் உடல் உறுப்புகள் பெரும்பாலும் மனித உறுப்புகளைப் போலவே வேலை செய்கின்றன. எனவே, இப்பிராணிகளைக் கொண்டு சோதனைகள் செய்து நம் உடலைப் பற்றிய பல உண்மைகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள். பார்க்க : உடல்; இரத்த மண்டலம்; எலும்பு மண்டலம்; கழிவு மண்டலம்; சீரண மண்டலம்; நரம்பு மண்டலம்; மூச்சு மண்டலம்.

உடற்பயிற்சி: ”ஓடி விளையாடு பாப்பா” என்ற பாரதியாரின் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வளரும் குழந்தைகள் நன்கு ஓடியாடி விளையாட வேண்டும். இப்படி விளையாடுவது நல்ல உடற் பயிற்சியாகும். உடற்பயிற்சியின் மூலம் உடலும் உள்ளமும் வலிமை பெறும். உடற்பயிற்சி எல்லாருக்கும் மிகவும் அவசியம்.


[[பெரியவர்களுக்கும் உடற்பயிற்சி அவசியம். ஜெர்மனியில் நடைபெற்ற இந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.]]