பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64 எவரஸ்ட்

கொள்ள வேண்டும். எல்லா எலும்புகளுக்கும் இரத்தம் தடையின்றி வேகமாகச் செல்ல வேண்டும். இதற்குத் தூயகாற்றை நாம் சுவாசிக்க வேண்டும். எலும்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாத கால்சியம் என்னும் கண்ணம்புச்சத்து நம் உணவில் போதிய அளவு சேரவேண்டும். D வைட்டமினும் எலும்பின் வளர்ச்சிக்கு அவசியம். இது குறைந்தால் எலும்பு வளராது. எலும்பு வலுப்பெறாமல் வளைந்து போகும். இந்த நோய்க்குக் கணை நோய் என்று பெயர். புகையிலை, அபினி, சாராயம் போன்ற பொருள்களிலுள்ள நஞ்சுகளால் எலும்புக்குத் தீங்கு நேரும். எலும்புக்கூடு சீராக இருக்கவும், செம்மையாக இயங்கவும், சமமாக வளரவும் தக்க உடற்பயிற்சியும் அவசியம்.

மனிதர்களைத் தவிர, மீன்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கும் எலும்புகள் உண்டு. முதுகு எலும்பு உடைய பிராணிகளை முதுகுத்தண்டுள்ளன (த.க.) என்றும், முதுகு எலும்பு இல்லாத பிராணிகளை முதுகுத்தண்டில்லன (த.க.) என்றும் பாகுபடுத்தி யிருக்கிறார்கள். பார்க்க: உடல்; முதுகுத்தண்டில்லன; முதுகுத்தண்டுள்ளன.


எவரஸ்ட்: உலகிலேயே மிக உயரமான மலைச்சிகரம் எவரஸ்ட். இந்தியாவின் வடஎல்லையாக உள்ள இமயமலையில் இச்சிகரம் உள்ளது. இதன் உயரம் 8,850 மீட்டர் (29,028 அடி.) நேப்பாளத்திற்கும் திபெத்திற்கும் இடையில் இச்சிகரம் இருக்கிறது.

இச்சிகரத்தை 1850-ல் கண்டுபிடித்தனர். இமயமலைப் பிரதேசங்களை அளந்து படம் வரையச் சென்ற இந்திய அரசாங்க அதிகாரிகளே இதனை முதன் முதலாகக் கண்டுபிடித்தனர். அப்போது இந்திய நில அளவைத் துறையின் சர்வேயர் ஜெனரலாக இருந்த சர் ஜார்ஜ் எவரஸ்ட் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் நினைவாக இச்சிகரத்திற்கு 'எவரஸ்ட்' என்று பெயரிடப்பட்டது.

பனி அடர்ந்த இச்சிகரத்தில் ஏறி அதன் உச்சியை அடைவது செயற்கரிய செயலாகக் கருதப்பட்டது. எனவே பலரும் இச்சிகரத்தின் உச்சியை அடைய முயற்சி செய்தனர். முதன் முதலாக 1922ஆம் ஆண்டில் புரூஸ் என்ற பிரிட்டிஷ்காரர் தலைமையில் ஒரு குழுவினர் இச்சிகரத்தின் மீது ஏற முயன்றனர். ஆனால் கடுமையான புயல்காற்று வீசியதால் அக்குழுவினரால் உச்சியை அடைய முடியவில்லை. அவர்களைத் தொடர்ந்து பல நாட்டினர் பல முறை முயன்றனர். 1953ஆம் ஆண்டு வரை மொத்தம் 15 முறை முயற்சி நடைபெற்றது. இம்முயற்சியில் பலர் இறந்து போயினர்.

பிரிட்டிஷ் தளபதி ஹன்ட் என்பவர் தலைமையில் 1953-ல் சென்ற குழுவினர் முதன் முதலாகச் சிகரத்தின் உச்சியை அடைவதில் வெற்றி பெற்றனர். அவர்களுள் டென்சிங் நார்க்கே என்ற இந்தியரும், எட்மண் ஹில்லாரி என்ற நியூஜிலாந்து நாட்டினரும் 1953 மே 29ஆம் நாள் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.

இவ்வெற்றிக்குப் பிறகு 1956-ல் சுவிட்ஸர்லாந்துக் குழுவினரும், 1963-ல் அமெரிக்கரும் எவரஸ்ட் உச்சியை அடைவதில் வெற்றி கண்டனர். முற்றிலும் இந்தியர்களடங்கிய குழு ஒன்று 1960-ல் எவரஸ்ட் சிகரம் மீது ஏற முயன்றது. உச்சியை அடைய 700 அடி இருக்கும்போது கடும் பனிப்புயல் வீசியதால் அவர்கள் அங்கிருந்து திரும்ப வேண்டியதாயிற்று. 1962-ல் மேற்கொள்ளப்பட்ட மற்றோரு முயற்சியும் வெற்றி பெறவில்லை. இறுதியாக 1965-ல் கோஹ்லி என்பவர் தலைமையில் சென்ற குழுவினர் வெற்றி பெற்றனர். இக்குழுவைச் சேர்ந்த ஒன்பதுபேர் சிகரத்தின் உச்சியில் ஏறி இந்திய தேசீயக் கொடியை நாட்டினர். பார்க்க : இமயமலை. எவரஸ்ட் சிகரம்