பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66 எழுதுதல்

தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் தனித்தனி எழுத்துகள் உண்டு. அவ்வெழுத்துகளின் வடிவங்களும் வேறு வேறாக உள்னன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட்டெழுத்துகள் என்ற தமிழ் எழுத்துக்களும் வழங்கிவந்தன. இவ்வெழுத்துகள் வட்ட வடிவத்தில் இருந்தன. சமஸ்கிருதம், கன்னடம்; தெலுங்கு போன்ற மொழிகளில் கூட்டெழுத்துகள் உண்டு. இரண்டு மூன்று எழுத்துகள் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெழுத்துக்கள் கிடையா.

தமிழ் வளர்ந்துவரும் ஒரு மொழி. ஏராளமான சொற்கள் பிறமொழிகளிலிருந்து தமிழில் நுழைந்திருக்கின்றன. ஆகையால் ஜ, ஸ்ரீ, ஷ, ஸ, ஹ, க்ஷ என்ற எழுத்துகளும் தமிழில் சேர்க்கப்பட்டுள்ளன. கலைகள், விஞ்ஞானம் இவற்றின் வளர்ச்சிக்கேற்பப் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' குற்றமல்ல என்று நன்னூல் என்னும் தமிழ் இலக்கணம் கூறுகின்றது.

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இவ்வெழுத்துகள் சொல்லில் எவ்வாறு சேர்கின்றன என்பவற்றுக்குத் தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.


எழுதுதல் : மனத்தில் பல எண்ணங்கள் தோன்றுகின்றன. அவற்றை அப்படியே காகிதத்தில் எழுதிவிடுகிறோம். மிகப் பழங்காலத்தில் மக்களுக்கு எழுதத் தெரியாது. ஏனென்றால் அப்போது எழுத்துகளே இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் குகைகளில் வாழ்ந்து வந்தார்கள். குகைச்சுவர்களின் மேல் அவர்கள் விலங்குகளின் உருவங்களை எழுதினார்கள். ஸ்பெயின் முதலிய நாடுகளில் அந்த உருவப்படங்கள் கிடைத்திருக்கின்றன. அந்தப் படங்களை அவர்கள் அழகுக்காக எழுதியிருக்கலாம். அல்லது, அவர்கள் இன்ன விலங்குகளைக் கொன்றார்கள் என்று தெரிவிப்பதற்காக எழுதியிருக்கலாம். அவர்கள் எண்ணிய எண்ணங்களை அப்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

[[செப்பேடுகளில் எழுத்துகள். கடாரத்து அரசன் நாகப்பட்டினத்தில் கட்டிய ஒரு விகாரத்துக்கு இராஜராஜசோழன் ஆனைமங்கலம் என்ற ஊரை அளித்ததை இந்தச் செப்பேடுகள் குறிக்கின்றன. இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்திலுள்ள லெய்டன் நகரில் உள்ளன]]

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் வாழ்ந்திருந்த மக்கள் தாங்கள் எண்ணியதையும், பேசியதையும் படங்களாகவே எழுதினர். இவற்றுக்குப் பட எழுத்துக்கள் என்று பெயர். அவர்கள் இந்தப் பட எழுத்துகளைக் கற்சுவர்களின் மேல் செதுக்கினர். அசிரியா, பாபிலோனியா என்ற நாடுகளில், பழங்காலத்தில் வேறு ஒருவகையான எழுத்துகளை எழுதி னார்கள். பச்சைக் களிமண் பலகைகளில் உளி போன்ற முனைகளையுடைய குச்சிகளினால் குத்திக் கோடுகோடாக அந்த எழுத்துக்களை எழுதினார்கள். அந்தக் கோடெழுத்துகளுக்கு உளிவெட்டு எழுத்துகள் என்று பெயர்.

பட எழுத்துகளையும், உளிவெட்டு எழுத்துகளையும் எல்லாருமே கற்றுக் கொள்ள முடியாது; சிலர்தான் கற்றுக்கொள்ள முடியும். அவற்றை எழுதுவதும், படித்துப் புரிந்துகொள்வதும் கடினம்.

காலப்போக்கில் தனித்தனி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. கருங்கல் பாறைகளின் மேலும், சுவர்களின்மேலும் பண்டைய மக்கள் எழுத்துகளைச் செதுக்கி வைத்திருப்பதை இன்றும் காணலாம். பதனிட்ட தோலின்மேலும், மரப்பட்டைகளின் மேலும், பானை ஓடுகளின் மேலும், பனை ஓலைகளின் மேலும் எழுதும் வழக்கம் சில நாடுகளில் ஏற்பட்டது. இவ்விதத்தி லெல்லாம் எழுதும் போது எழுத்தின் உருவங்கள் மாறிக்கொண்டே வந்தன.

காகிதத்தில் ஐரோப்பிய மக்கள் அழகாக எழுதுவர். வண்ணப்பூச் சித்திரங்களால் தாம் எழுதியதை அழகு செய்வார்கள். கையால் எழுதுவதை ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரையில் ஒரு பெரிய கலையாகவே மக்கள் கருதி வந்தனர்.

அச்சு எந்திரம் வந்த பிறகு எழுத்து வடிவங்கள் பலபல விதங்களாக அழகுபடத் திருத்தியமைக்கப்பட்டன. நிமிர்ந்த எழுத்து, சாய்ந்த எழுத்து, மெல்லிய எழுத்து, தடித்த எழுத்து, கையெழுத்து முதலிய பலவகையான வடிவங்களில் அச்செழுத்துக்கள் உண்டு. அச்சு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் எழுத்து உருவங்கள் ஒரு நிலையாக அமைந்தன.

[[சீனாவில் சுவான்-செள என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு. மேலே தமிழ் எழுத்துகளையும் கீழ்வரியில் சீன எழுத்துகளையும் காணலாம்.]]