பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒளிச்சேர்க்கை


பழங்காலத்தில் மக்கள் செயற்கை முறையில் ஒளியைப் பெறுவதற்குப் பல முறைகளைக் கையாண்டனர். தீப்பந்தங்களைப் பலவகையாகத் தயாரித்தனர். எண்ணெய் வித்துகளை எரித்தும், குச்சியின் முனையில் கொழுப்பைக் கட்டிக் கொளுத்தியும், எண்ணெயில் நனைத்த குச்சிகள், மரப்பட்டைகள், துணி ஆகியவற்றை எரித்தும் ஒளியைப் பெற்றனர். எண்ணெயில் துணியை தனைத்துத் தீப்பந்தம் எரிப்பதை இன்றும் நீங்கள் கோயில் திருவிழாக்களில் பார்க்கலாம். இதை அடிப்படையாக வைத்தே எண்ணெய் விளக்குகள் செய்யப்பட்டன. பின்னர் மெழுகுவத்திகளும், மான்டில் விளக்குகளும் (பெட்ரோ மாக்ஸ்) வழக்கத்திற்கு வந்தன. இன்று மின்சக்தியின் உதவியால் பலவகை மின்சார விளக்குகளை ஏற்றி நாம் ஒளியைப் பெறுகிறோம்.

உயிர் வாழ்க்கைக்கு ஒளி இன்றியமையாதது. தாவரங்கள் தம் உணவைத் தயாரித்துக்கொள்வதற்கு ஒளி தேவைப்படுகிறது. (பார்க்க: ஒளிச்சேர்க்கை). தாவரங்கள் இல்லாவிட்டால் உலகில் எந்த உயிரும் வாழமுடியாது. உணவின் அடிப்படையே தாவரங்கள்தாம். பார்க்க: ஆடி: ஒளிச்சேர்க்கை; காமிரா ; சந்திரன்; சூரியன்; நிறமாலையியல்; லென்ஸ்.


ஒளிச்சேர்க்கை ( Photosynthesis ) : தாவரங்கள் தம் உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன. இதற்குச் சூரிய ஒளி இன்றியமையாதது. தாவரத்தின் வளர்ச்சிக்குச் சர்க்கரையும், மாச்சத்தும் (Carbo-hydrate) தேவை. இவற்றைத் தயாரிக்கத் தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் நீரையும் கார்பன் டையாக்சைடையும் சேர்க்கின்றன. ஒளியின் உதவியால் இப்பொருள்கள் சேர்க்கப்படுவதால் இம்முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

கார்பன் டையாக்சைடு, நீர், ஒரு சிறு அளவு தாது உப்புகள் ஆகியவை ஒன்று சேரும்போது ஒரு ரசாயன மாற்றம் உண்டாகின்றது. இந்த ரசாயன மாற்றம் ஏற்படுவதால் தாவரங்கள் வளர்கின்றன. ஒளிச்சேர்க்கையின்போது ஒளிச் சக்தி ரசாயன சக்தியாக மாறுகிறது.

தாவரங்கள் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களால் (த.க.) ஆனவை. இலை, தண்டு போன்ற பசுமையான பகுதிகளிலுள்ள உயிரணுக்களில் பசுங்கணிகங்கள் (Chloroplasts) என்ற சிறிய பொருள்கள் உள்ளன. இவற்றுக்குப் பச்சை நிறத்தைக் கொடுப்பது இவற்றிலுள்ள பச்சையம் (Chlorophyll) என்ற பொருளாகும். காளான்கள் (த.க.), ஒட்டுண்ணிகளாக (த.க.) வாழும் ஒரு சில தாவரங்கள் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லாத் தாவரங்களிலும் பச்சையம் இருக்கிறது. இந்தப் பச்சையந்தான் தாவரத்திற்கு வேண்டிய உணவைத் தயாரிக்கிறது.

இலையின் அடிப்புறத்தில் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய துளைகள் பல்லாயிரம் உள்ளன. இவற்றின் மூலம் காற்று இலைக்குள் நுழைகிறது. அப்போது இலையிலுள்ள பச்சையம், காற்றிலிருந்து கார்பன் டையாக்சைடைப் பிரித்து எடுக்கிறது. பிறகு அதை வேரிலிருந்து வரும் நீருடன் கலக்கிறது. கார்பன் டையாக்சைடும் நீரும் சேர்ந்த கலவையிலிருந்து செடியின் வளர்ச்சிக்குத் தேவையான சர்க்கரையும், மாச்சத்தும் கிடைக்கின்றன. வேரிலிருந்து வரும் நீர் சத்து நிறைந்ததாகும். இதில் நிலத்திலுள்ள தாது உப்புகளும் கரைந்திருக்கும். இலையினுள் புகுந்த காற்றில் மிகுந்துள்ள ஆக்சிஜன் அத்துளைகள் மூலமே வெளியேறிவிடுகிறது. இந்தச் செய்முறைக்குத்தான் சூரிய ஒளி தேவைப்படுகிறது.

சூரியனிடமிருந்து வெளியாகும் மொத்த ஒளியில் மிகச்சிறு பகுதியே பூமிக்குக் கிடைக்கிறது. தாவரங்கள் தம்மால் இயன்ற அளவு இவ்வொளியைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மரம் செடிகளின் இலைகள் யாவும் சூரியனை நோக்கியே வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவை ஒன்றையொன்று மறைப்பதில்லை. முழு வளர்ச்சி பெற்ற ஒரு மரம் ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோகிராம் எடையுள்ள மாப்பொருளைத் தயாரித்துவிடும். சூரிய ஒளிக்குப் பதில் மின்சார விளக்குகளைக் கொண்டும் ஒளிச்சேர்க்கை நடைபெறத் தூண்டலாம்.

ஒளிச்சேர்க்கையினால் உலகில் உயிர் வாழ்க்கைக்கு ஒரு பெரிய நன்மை உண்டு. நாம் சுவாசிக்கும்பொழுது காற்றிலுள்ள ஆக்சிஜனை உள்ளே நிறுத்திக்கொண்டு கார்பன் டையாக்சைடை வெளி விடுகிறோம். விலங்குகளும் நம்மைப் போலவே கார்பன் டையாக்சைடை வெளிவிடுகின்றன. தொடர்ந்து இவ்வாறு நடைபெற்று வந்தால் காற்றிலுள்ள ஆக்சிஜன் முழுவதும் செலவழிந்து நம்மைச் சுற்றிலும் கார்பன் டையாக்சைடு ஒன்றே நிறைத்திருக்கும். ஆக்சிஜன் இல்லாவிட்டால் உலகில் உயிர்கள் வாழவே முடியாது. இந்நிலைமை ஏற்படாதவாறு ஒளிச்சேர்க்கை உயிர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. எப்படியெனில் ஒளிச் சேர்க்கையின்போது தாவரங்கள் காற்றிலுள்ள கார்பன் டையாக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. செலவழிந்த ஆக்சிஜன் இதனால் மீண்டும் -