பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

லூயி - லென்ஸ்

லூயி XIV

லூயி XIV லூயி லூயி XIV ( Louis XIV, 1638 - 1715) : பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர்களுள் மிக நீண்டகாலம் ஆட்சி செய்தவர் பதினான்காம் லூயி. இவர் தமது ஐந்தாம் வயதிலேயே அரசராகி 72 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். 1643-ல் தந்தை இறந்ததும் இவர் அரசரானார். இவர் பெரியவராகும் வரை இவருடைய தாயார் அரசப் பிரதிநிதி யாக (Regent ) இருந்தார். ஆட்சிப் பொறுப்பை கார்டினல் மாஸரின் (Mazarin) என்பவர் கவனித்து வந்தார். 1660-ல் லூயி, மரீ தெரெசாவை மணந்தார். 1661-ல் கார்டினல் மாஸரின் இறந்ததும், ஆட்சிப்பொறுப்பு முழுவதையும் தாமே ஏற்று சர்வாதிகாரியானார்.

இவருடைய ஆட்சியின் முற்பகுதியில் பிரான்ஸ் மிகவும் சிறந்த நிலையை அடைந்தது. நாட்டின் பொருளாதாரம் உச்சநிலைக்கு உயர்ந்தது. அயல் நாடுகளில் பிரான்ஸின் குடியேற்றங்கள் பல அமைந்தன. பிரெஞ்சுப் படை ஐரோப்பா விலேயே மிகப் பெரியதாகச் சீர்திருத்தி அமைக்கப்பட்டது. எல்லாத் துறைகளிலும் பிரான்ஸ் ஐரோப்பிய நாடுகளில் முன் னணியில் நின்றது. லூயியின் புகழ் ஓங்கி இருந்தது.

ஆனால் இவர் செய்த சில தவறுகள் இவருடைய சாதனைகளை மங்கச் செய்து விட்டன. தம் ஆட்சியின் பிற்பகுதியில், நாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நான்கு பெரிய போர்களில் ஈடுபட்டார். முதலில் தம் மனைவிக்கு நெதர்லாந்தின் ஒரு பகுதி சேரவேண்டும் என 1667 -'68-ல் பெல்ஜியத்துடன் போருக்குச் சென்றார்; சில பகுதிகள் இவருக்குக் கிடைத்தன. அடுத்து, நெதர் லாந்து மீது படையெடுத்தார் (1672-78). இப்போரில் இவர் படை தோற்றது ; பிரான்ஸின் சில பகுதிகளை இவர் இழந்தார். மீண்டும் நெதர்லாந்துடன் (1689-'97) போரிட்டுத் தோற்றுப் பல பகுதிகளை இழந்தார். இறுதியில் ஸ்பானிய வாரிசுரிமைப் போரில் (1702- '13) ஈடுபட்டார். இப்போரில், தமது பேரன் ஐந்தாம் பிலிப்புக்கு ஸ்பெயின் அரசுரிமையைப் பெற்றார்; ஆனால் நாட்டின் வேறு பல பகுதிகளை இழக்க நேர்ந்தது. இவ்வாறு நாட்டை விரிவுபடுத்த இவர் எண்ணியதற்கு மாறாக, நாட்டின் எல்லை சுருங்கியது.

லூயி கத்தோலிக்கர்; மிகுந்த மதப் பற்று உடையவர். அதனால் இவர் பிராட் டெஸ்டென்டு மதத்தைச் சட்ட விரோத மாக்கினார். அம் மதத்தைப் பின்பற்றி வந்த ஹியூகனாட்டுகள் (Huguenots ) என்போருக்குத் தம் முன்னோர் வழங்கி வந்த உரிமைகளை நீக்கினார். இதனால் பெரும்பாலான ஹியூகனாட்டுகள் அயல் நாடுகளுக்குச் சென்று விட்டனர். ஹியூக னாட்டுகள் சிறந்த மாலுமிகள்; கடும் உழைப்பாளிகள்; வேளாண்மைத் தொழிலில் திறமை பெற்றவர்கள். அவர்களை நாட்டைவிட்டு விரட்டியதன் மூலம், பிரான்ஸ் ஒரு கடல் வல்லரசாக உருவாகும் வாய்ப்பை இழந்தது. தொழில்கள் முடங்கின. பெருமளவு நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாகின.

இக் காரணங்களினாலும், போர்களினால் ஏற்பட்ட வீண் செலவுகளினாலும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. அரசின் கடன் சுமை ஏறியது. இவற்றுக்கெல்லாம் மக்கள் மீது பல வரிகள் விதிக்கப்பட்டன. மக்கள் அரசின் மீது வெறுப்படையலானார்கள். 1715-ல் லூயி இறந்தார். இவர் காலத்தில் மக்கள் அரசின் மீது கொண்டிருந்த மனக்கசப்பு மேன் மேலும் பெருகியதன் விளைவாகவே பிரெஞ்சுப் புரட்சி (த.க.) தோன்றிற்று.

லென்ஸ் : பார்வை தெளிவாக இல்லாவிட்டால் மூக்குக் கண்ணாடி அணிந்துகொள்கிறோம் அல்லவா? இதில் இருப்பது சாதாரணக் கண்ணாடி அல்ல. சாதாரணக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தால் மறுபுறம் உள்ள பொருள்கள் அதே அளவில் தான் தெரியும். ஆனால் மூக்குக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தால் பொருள்கள் சிறிதாகவோ பெரிதாகவோ தெரியும். இதிலுள்ள கண்ணாடிக்கு 'லென்ஸ்' என்று பெயர்.