பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று கூறி வாழ்ந்தார்கள் நமது முன்னோர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடி சரித்திரம் படைத்தவர்கள் அல்லவா!

‘கூடி விளையாடு பாப்பா’ என்று முன்னோர் வழி ஒற்றிப் பாடிய பாரதியும், ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்று உறுதியாகக் கூறியபின் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்று இறுதியையும் சுட்டிக்காட்டிச் சென்றார்.

கூடி வாழ்வதற்குக் குறையாத அன்பும், நிறைவான பண்பும், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும், வேற்றுமை நினையாத குணப்பாங்கும் வேண்டும்.

அத்தகைய அரிய பண்புகளை விளைத்து, அழகுற வளர்க்கும் அதிசய நிலந்தான் ஆடுகளமாகும்.

ஆற்றல் மிகுந்த இளைய தலைமுறையை உருவாக்கி, ஏற்றத் தாழ்வற்ற புதிய சமுதாயத்தை அமைத்துத் தருகின்ற அற்புத சக்தியினைப் பெற்றிருப்பது விளையாட்டுக்களே.

மூன்று வயது குழந்தைகள் முதல், எம். ஏ. வகுப்பு மாணவர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரை எல்லோரிடத்தும் விளையாட்டுத்துறை பொறுப்பேற்று, கற்றுத் தந்து பெற்ற அனுபவத்தின் சாரமே இந்நூல்.

இளைஞர்கள் அனைவரும் விளையாடிப் பழக வாய்ப்பளிக்க வேண்டும். விளையாடிக் களிக்கும் வசதியினைப் பெருக்கி ஊக்குவிக்க வேண்டும்.

அதன் காரணமாகவே, ஓய்வு நேரங்களில் ஒன்றாகக் கூடி உல்லாசமாக விளையாடும் 100 விளையாட்டுக்களை இந்நூலில் தந்துள்ளேன்.