பக்கம்:கேரக்டர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



123

"அட! நீ இன்னாப்பா, கமால் பாஷாவைத் திப்புவாப் போடறேங்கறே? அவன் ஒரேயடியாத் திக்குவானேப்பா!"

"தாடி நேச்சுரலாயிருக்குமேன்னு பார்த்தேன். சரி, உட்டுடு; வாணாம். நம்ம ஹெட்கிளார்க் லோகநாதனைப் போட்டுடலாமா? அவனுக்கு ஸ்டேஜ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குது; என்ன சொல்றே?"

"அது ஐடியா! சரி, தபலா, ஆர்மோனியம் இதுக்கெல்லாம்...?"

"அதுக்கெல்லாம் ஆளுங்க இருக்காங்கப்பா. ஆராவமுது மனசு வெச்சா ஆகாத காரியம் உண்டா? டைரக்ஷனுக்குக்கூட ஆசாமி யாருன்னு தீர்மானிச்சு வெச்சிருக்கேன். யார் சொல்லட்டுமா? 'யானை பிடிச்சவன் தைரியசாலி'ன்னு ஒரு படம் வரல்லே, அதன் டைரக்டர்!"

"ஜமாய் ஆராவமுது, நான் வறேன், இண்டர்வல்லே மீட் பண்ணுவோம்..."

நண்பர்களைக் கூட்டி, இரண்டு மாதம் இராப் பகல் தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டு, கைப் பணத்தைச் செலவழித்து, ஒரு விதமாக ஒத்திகை நடத்தி நாடகத்துக்குத் தேதியும் வைத்து விட்டான் ஆராவமுதன். அலைந்து திரிந்து தெரிந்தவர்கள் தலையிலெல்லாம் டிக்கட்டைக் கட்டினான். பத்திரிகைக்காரர்களையெல்லாம் நேரில் போய்ப் பார்த்து, "கட்டாயம் நாடகத்துக்கு வந்து உங்க பேப்பர்லே விமர்சனம் எழுதனும், ஸார்" என்று கேட்டுக்கொண்டான். நாடகத்துக்கு ஒருசினிமா நட்சத்திரத்தைத் தலைமை தாங்க ஏற்பாடு செய்தான். எஸ்.ஆர்.ஜி.ஓ.ஏ.டி.ஏ. நாடக அரங்கேற்ற மலர் ஒன்று தயாரித்து அதில் நடிகர்களின் போட்டோக்கள், கதைச் சுருக்கம் இவற்றை வெளியிட்டான். அட்டையின் கடைசிப் பக்கத்தில்,

எமது அடுத்த சமூக நாடகம்

?

எதிர்பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/123&oldid=1481161" இலிருந்து மீள்விக்கப்பட்டது