பக்கம்:கேரக்டர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மீண்டும் ஆறுமாதம் கழித்து வந்தான்.

"என்னப்பா.சந்தர்!" என்று ஈன சுரத்தில் ஒலித்த பலராமன் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

தாடியும் மீசையும் வளர்ந்து ஏதோ முற்றும் துறந்த முனிவர்போல் காட்சி அளித்தான். ஹல்லோவெல்லாம் போய் 'அப்பா'வில் வந்துவிட்டது. கழுத்திலே துளசி மாலை! முகத்திலே வேதாந்தக் களை!

"என்ன பலராமா! இது என்ன வேஷம்? இப்ப எங்கே இருக்கே? உன் சினிமாக் கம்பெனி என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"அது அப்போதே 'திவால்'! சினிமா சுத்தப் பிராடுப்பா. இதெல்லாம் எனக்குச் சரிப்படலே. ரிஷிகேசம் போய் ஆறு மாசம் இருந்துட்டுப் போனவாரம்தான் வந்தேன், இப்போ சுவாமி துக்கானந்த தீர்த்திடம் சீடனாயிருக்கேன். ஆப்டர் ஆல் லைப் ஈஸ் நத்திங்: கீதையிலே கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்லியிருக்கிறார், பார்த்தாயா? அர்ஜுனா சோர்வடையாதே! சுற்றம் அது இது என்று பார்க்காதே! கர்மா தான் முக்கியம்னு சொல்றாரே. எனக்கு யார் இருக்கா? பெண்டாட்டியா? பிள்ளையா? ஒண்டிக்கட்டை! ஏகாங்கி எங்கே இருந்தா என்ன...சந்தர் ஒரு நாலணா இருந்தாக் கொடு. காலையிலிருந்து காப்பிகூடச் சாப்பிடல்லே!" என்றான்.

சமீபத்தில் ஒருநாள் மூர்மார்க்கெட் பக்கம் போய்க் கொண்டிருந்தேன்.

"கபர்குத் கபாஹை? அதாவது இப்போது இமாசல் பாபா என்ன சொல்கிறார் என்றால்......" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன், நம்ப பலராமன்! விஷக்கடி மருந்து வியாபாரி ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்ததைத் தமிழில் அவன் அநாயசமாக மொழி பெயர்த்துக்கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/94&oldid=1479786" இலிருந்து மீள்விக்கப்பட்டது