பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

அலைந்து திரிந்து, “உணவு உளது; உண்பார் உளரோ” என வினவிச் சென்றான்; எவரும் அவன்முன் எதிர்ப் பட்டிலர். பெருங்கூட்டமாய் வந்து, அவன் அளிக்கும் உணவைப் பெற நெடிது காத்திருந்த நிலைபோய், அவனைக் கண்டு, “உயிர் கொண்டு உள்ளனையோ” என வினவுவார் ஒருவரும் இலராகும் இழிநிலை வந்துற்றது. அதுமட்டுமன்று; ஊர்தோறும் சென்று உண்போரைத் தேடி அலையும் அவன் செயல்கண்டு, “யார் இவன்? பித்தம் பிடித்தவனோ” எனப் பழிக்கவும் தலைப்பட்டனர், மக்கள். அந்நிலை, ஆபுத்திரனுக்கு ஆற்றொணாத் துயர் அளித்தது. திரண்ட செல்வத்தைப் பெருங்கடல் கொள்ளத் தனித்திருந்து வருந்தும் செல்வன்போல், ஆபுத்திரன் சிந்தை நொந்து, செல்லிடம் அறியாது சென்றுகொண்டே இருந்தான்.

ஒரு நாள், கடல் கடந்த நாடுகளினின்று கலம் ஊர்ந்து வந்தோர் சிலர் ஆபுத்திரனேக் கண்டு அவன் மனத்துயர் அறிந்தனர்; அவர்கள் தாங்கள் சென்று வந்த சாவக நாட்டில், மக்களும் மாவும், மழையின்மையால் வருந்துகின்றனர் என்பதை ஆபுத்திரனுக்கு அறிவித்தனர். அது கேட்ட ஆபுத்திரன், கொள்வோர்ப்பெறாது பயன் குன்றும் பாத்திரத்தோடு இன்றே சாவகம் செல்வேன் எனத் துணிந்தான். சின்னாட்களுக்கெல்லாம், சாவகம் செல்வாரோடு வங்கம் ஏறிப் புறப்பட்டான்.

கலம் கடல் நீரைப் பிளந்துகொண்டு சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் காற்றுச் சுழன்றடிக்கக் கண்ட மீகாமன், கலத்திற்குக் கேடு நேராதிருத்தற் பொருட்டுக் கலத்தை, அண்மையில் இருந்த மணி