பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் கடைசியாகக் கண்டேன்!


நான் கடைசியாக அவரைக் கண்டது, நான் மேலே குறிப்பிட்ட அவருடைய அருங்குணத்தை விளக்கக்கூடிய ஒரு சம்பவமாகவே இருந்தது. இரண்டு முதியவரும், பெரியார் இராமசாமியும், தோழர் சிங்காரவேலரும் ஒரே மேடையிலே உட்கார்ந்திருந்தனர், 20-6-43-ல் சென்னை செயிண்ட்மேரி மண்டபத்தில் அன்று அங்கு தீண்டாமை ஒழிப்பு நாள்! தளர்ந்த உடல், தள்ளாடும் நடை, நரைத்த தலை, இக்கோலத்திலே இருந்தார் மா. சிங்காரவேலு, தீண்டாமை ஒழிப்புத் தினம் என்று கேள்விப்பட்டதும், அவர், "தள்ளாமை"யையும் மறந்து, அங்கு வந்திருந்தார். பாட்டாளி மக்களின் சுயமரியாதைக்காகவும், சுகவாழ்வுக்காகவும் போராடிய அந்தப் புரட்சி வீரரை, அன்று நான் கடைசி முறையாகக் கண்டேன் அவர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டேன், திடுக்கிடவில்லை; ஆனால் திகைத்தேன். இனி அத்தகைய ஓர் மாவீரன் கிடைப்பாரா, என்று. மறைந்த மாவீரருக்கு நமது மரியாதையைச் செலுத்துவோமாக. அவர் வகுத்த மார்க்கம் பழுது படாதபடி பாதுகாத்து, அவருடைய இலட்சியமாகிய மக்கள் ஆட்சி மலருவதற்காக, நாமும் உழைப்போமாக என்று மாவீரரை மதிப்போரெல்லாரும் உறுதிகொள்வார்களாக.