பக்கம்:சிந்தனை மேடை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

மலர்ந்த நிலை

இன்று நாம் வாழ்கிற சமுதாயம் புதுமைகள் நிறைந்ததாகச் சொல்லப்படுகிறது. போலிக் கெளரவங்களை விட்டுவிட்டு மனிதனுக்கு மனிதன் இதயத்துக்கு இதயம் மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்று தலைவர்களும், பிரமுகர்களும் பேசுகிறார்கள். புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் எழுதுகிறார்கள். ஆனால் இப்படிப் பேசுவதையும் எழுதுவதையும் தவிர இதே பண்பை நடைமுறையில் வாழ்ந்து காட்டு கிற சிலரும் சமூகத்துக்குத் தேவை. அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு இன்னும் பத்துப் பேராவது திருந்த முடியும்.

'காட்சிக்கு எளிமை' — என்ற இந்தத் தொடரை தான் சொல்கிற இந்தப் புதுப் பொருளில் இணைத்து நன்றாகச் சிந்தியுங்கள். இதில் சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்களையும் இதைப் படித்தவுடன் நீங்கள் சொல்லத் துடிக்கிற கருத்துக்களையும், உங்கள் மன அரங்கினுள் ஒரு மேடையில் இணைத்து நிறுத்திச் சிந்தியுங்கள்.

அப்படிச் சிந்திக்கிற போது 'பூக்களைப் போல எல்லார்க்கும் மலர்ந்து எல்லார்க்கும் மணக்க வேண்டும்’ என்று நீங்களும் ஆசைப்படுவீர்கள். உங்களால் அவ்வாறு ஆசைப்பட முடியவில்லையானால் உங்களைப் பற்றி நான் நிறையச் சித்திக்க வேண்டியதுதான்.

இருண்ட எண்ணங்களால் நத்தையைப் போல் தனக்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ளாமல் சமுதாய நம்பிக்கையோடு பரந்து நின்று வாழ வேண்டுமென்று இந்த மேடையில் அமர்ந்து முதலாவதாகச் சிந்தித்தோம். சமுதாய நம்பிக் கைக்குச் சிறந்ததாக அமையக் கூடிய பண்பு 'காட்சிக்கு எளிமை’தான்.

காட்சிக்கு எளிமையாயிருப்பதனால் . 'நாம் பிறரிடம் மிகவும் மலிந்த நிலைக்குப் போய் விடுகிறோமே' என்று எண்ணி யாரும் தனக்குத் தானே குழப்பமடைய வேண்டியதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/11&oldid=1552956" இலிருந்து மீள்விக்கப்பட்டது