பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 193


போன்ற விளம்பர சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில், தியாகி சுப்பிரமணிய சிவாவும் அவரது நண்பர்களும் கால்நடையாக பல ஊர்களுக்கும் சென்று காங்கிரஸ் இயக்கம் பற்றிய பிரசாரத்தை மேற்கொண்டனர்.

பிராம்மணர், நகரத்தார், நாட்டார், அம்பலக்காரர், தேவர், உடையார், ஆதி திராவிடர், இஸ்லாமியர், கிறித்தவர் என்ற அனைத்து சமூகத்தினரும், விவசாயிகள் நெசவாளர்கள், வணிகர், பொற்கொல்லர் என்ற பல்வேறு தொழில்துறையினரும் நாட்டுப் பற்றுடன் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு தொண்டாற்றினர். வெள்ளையரது ஆதிக்கத்தினின்றும் நாட்டை விடுதலை பெறச் செய்வதற்கு பாடுபட உறுதிபூண்டனர். கி.பி. 1923-ல் சுப்பிரமணிய சிவா, ராஜாஜி ஆகியோர் இளையான்குடி, மானாமதுரை போன்ற ஊர்களில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அமராவதி புதுர் ராய.சொக்கலிங்கன் காரைக்குடி சொ.முருகப்பா, சா.கணேசன் ஆகிய நகரத்தர் இளைஞர்கள் கி.பி.1925-ல் இந்திய தேசிய காங்கிரசின் தொண்டர்களாக மாறினர்.

அடுத்து தமிழக சுற்றுப் பயணத்தின் பொழுது காந்தியடிகள் சிவகங்கைச் சீமைக்கும் வருகை தந்தார். திருப்புத்துார் காரைக்குடி தேவகோட்டை ஆகிய ஊர்களில் மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்றனர் வழியில் சிராவயல் கிராமத்தில் திரு. ப.ஜீவானந்தம், திரு. பொ.திரிகூட சுந்தரம் பிள்ளையும் நடத்தி வந்த ஏழை மாணவர் பள்ளிக்கும் வருகை தந்து திரு. ஜீவானந்தம் அவர்களது தொண்டைப் பாராட்டினார். காந்தியடிகளது பயணம் சுருக்கமாக இருந்தது. மக்களது மனத்தில் இந்தியக் காங்கிரசின் இயக்கம் பற்றிய அழுத்தமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. கதர்துணி நூற்பு, கதராடை அணிதல், மதுவிலக்கு போன்ற கிராம நிர்மாணத்திட்டங்களில் மிகவும் ஒன்றியவர்களாக சிவகங்கைச் சீமை மக்கள் மாறினர்.

தொடர்ந்து சீமையெங்கும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒத்துழையாமை இயக்கம், அதனை அஹிம்சை வழியில் நடத்திக் காண்பிப்பது பற்றிய பிரச்சாரம் செய்தார். காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்று சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டு ஏறவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடக்கமாக கொண்டு நாடு முழுவதும் மக்கள் சினந்து எழுந்தனர். பக்கத்தில் உள்ள வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடக்க இருந்த உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சிவகங்கையில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் திருச்சியருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் 1931-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்த அந்நிய துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல், தனிநபர் சத்தியாக்கிரகம் ஆகிய திட்டங்களில் கணிசமான தொகையினர் கலந்து கொண்டு சிறைகளை