பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

செந்தமிழ் பெட்டகம்


கந்துக்கடன் என்பவன் இராசமாபுரத்துச் செல்வ வணிகன் அவன் இறந்த தன் குழவியைப் புதைக்கத் தன்னந்தனியனாய் அவ்விடம் வந்தான் அதற்கு முன் பிறந்த அவன் குழந்தைகள் சில பிறந்தவுடன் இறந்தது கண்ட ஊரார் அவனது ஊழ்வினை காரணமாக அவனைப் பலவாறு தூற்றினர் ஆதலின், அதற்கு நாணிய அவன் ஒருவருமறியாதபடி அக்குழவியைப் புதைத்துச் செல்லக் கருதி வந்தவன், அங்குக் கிடந்த அரசக் குழவியை அதன் கையிலிருந்த மோதிரத்தால் அறிந்து அதனை எடுக்க, அது தும்பிற்று, உடனே தெய்வம் ‘சீவ' என வாழ்த்த அதனை அசரீரி எனக் கருதிய வணிகன், ‘சீவகன்' என்று அக்குழவிக்குப் பெயர் வழங்கி, அதனைக் கொண்டு சென்று, பிள்ளையை இழந்து வருந்திய தன் மனைவி சுநந்தை என்பாளிடம் கொடுத்து, 'இறந்த நின் மைந்தன் பிழைத்தான்’ எனக் கூறி அவளைத் தேற்றினன் சீவகன் அவளாற் சீராட்டி வளர்க்கப்பட்டு வளரலாயினன்

விசையை ஒருவாறு மனந்தேறி, தண்டகாரன்னியத் திருந்த தவப்பள்ளியைஅடைந்து, துறவுக் கோலத்துடன் தன் மகனுக்கு நலமுண்டாகும்படி நோற்று வந்தனள்

சீவகன் வளர்ந்து வருங்கால் சுநந்தை நந்தட்டன் என்னும் புதல்வனையும் ஈன்றாள் அவனும் பிறைமதி போல வளர, சீவகன் அவனுடனும் மற்றத் தோழர்களுடனும் அச்சணந்தி என்னும் ஆசிரியரிடம் பயின்று, வில் வித்தை முதலிய பல வித்தைகளிலும் நிகரற்றவனாய் விளங்கினான்

ஒரு நாள் ஆசிரியர் சீவகனுக்கு அவன் வரலாற்றை உணர்த்தினார் அதையறிந்த சீவகன், கட்டியங்காரனை உடனே கொன்று இழந்த ஆட்சியை எய்தத் துடித்தான். ஆசிரியர் ஓராண்டு வரையில் தன் மனக்கருத்து வெளியாகாதபடி அமைந்திருக்குமாறு கட்டளையிட, அவனும் அதற்கிசைந்தான்