பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

105

பெருமாளது திருத்தேர் (திருமலை ரெகுநாத சேதுபதியினால் வழங்கப் பெற்றது.) மிகவும் பழுதடைந்து விட்டதால் புதிய தேர் ஒன்றையும் செய்வித்து அந்த கோவிலுக்கு வழங்கினார். 1921-ல் திருச்சி நகரில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார் என்ற செய்தியும் உள்ளது. மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் வடக்கு ராஜகோபுர திருப்பணிக்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் சமஸ்தான அவைப் புலவராகத் தொடர்ந்து பணியாற்றிய மகாவித்துவான் இரா. இராகவ ஐயங்கார் சுவாமிகளைத் தமது தந்தையைப் போல வாழ்க்கைக்காக இராமநாதபுரம் நொச்சிவயல் ஊரணி வீதியில் ஒரு வீடு ஒன்றை அமைத்துக் கொடுத்ததுடன் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள போகலூர் கிராமத்தில் ஆற்றுப் பாய்ச்சலில் சில விளைநிலங்களையும் வாங்கித் தானமாக வழங்கினார். இவரது தந்தையைப் போலவே இவரும் சிறந்த தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான தனிப்பாடல்களை எழுதியிருப்பதுடன் திருக்குறள் வெண்பா என்ற நூலினையும் இயற்றியுள்ளார்.

IX சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி

1944-ல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியின் ஆட்சிகாலம் ஜமீன் ஒழிப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வந்த 1948-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. தமிழக வரலாற்றில் இராமநாதபுரம் சமஸ்தானம் என்று மிகச் சிறப்பாக முந்தைய நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களது தன்னரசு வளமையிலும், பரப்பிலும் குறுகி புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் எனப் பிரிவினை பெற்றுப் பின்னர் ஜமீன்தாரியாகி வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டது ஒரு சோக நிகழ்ச்சியாகும்.

இந்தக் கடைசி மன்னர் அரசியலிலும் ஈடுபட்டு இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராகவும், பின்னர் 1952-லிருந்து 1967 வரை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற இராமநாதபுரம் தொகுதி உறுப்பினராகவும், 1952 - 57 வரை ராஜாஜி, காமராசர் ஆகியோர் அமைச்சரவைகளில் முறையே விளையாட்டுத் துறை, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், இராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவராகவும், இறுதிவரை இருந்தார். இவர் இசைப்பிரியர். இவர்