பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சேதுபதி மன்னர் வரலாறு

மாறினர் என்பதும், அவர்களது ஆட்சி, மாட்சி பற்றிய செய்திகளும் வரலாற்றில் தெளிவாக இடம் பெறவில்லை. சேதுபதி மன்னர்களது பூர்வீகம் பற்றிய ஒன்றுக்கொன்று முரணான கதைகள் பலவும் உள்ளன.

முதலாவதாக இலங்கை சென்று சீதாப்பிராட்டியை மீட்டுவந்த இராமபிரானைப் பிரம்மஹத்தி தோஷம் தொடர்ந்து வந்ததால், அதற்கு தோஷநிவர்த்தியாக இராமேஸ்வரம் கடற்கரையில் சீதாப்பிராட்டி மண்ணால் சமைத்த லிங்கத்தை இராமபிரானும் சீதாப்பிராட்டியும் வழிபாடு செய்தனர் என்றும், அதற்குப் பிறகு அவர்கள் அயோத்தி திரும்புவதற்கு முன்னர் அங்கு மிகுதியாக வாழ்ந்த மறவர் இனத் தலைவரைச் சேது அணையைக் காத்து வருமாறு நியமித்தார் என்றும் அந்த மறத் தலைவரது வழிவந்தவர்கள்தான் சேதுபதிகள் என்பதும் செவிவழிச் செய்தி.

மற்றொன்று, இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்குக் கள்வர்களால் ஏற்படும் அபாயம் பற்றித் திருச்சியை ஆட்சி புரிந்த திருமலை நாயக்க மன்னருக்கு முறையீடுகள் வரப்பெற்றதாகவும் அதனை அடுத்து அவர் தமது பணியாளர்களில் ஒருவராகிய உடையாத் தேவர் என்பவரை இராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள கள்வர் பயத்தை நீக்கச் செய்தார் என்றும், அந்த உடையாத் தேவர் வழியினரே சேதுபதிகள் என்பது பிறிதொரு செய்தி[1]

சோழப் பேரரசை நிறுவிய இராஜராஜ சோழனும் அவர் மகன் இராஜேந்திர சோழனும் இலங்கை நாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டபோது, அவர்களது தானைத் தலைவர்களில் ஒருவரை இராமேஸ்வரம் பகுதிக்குப் பொறுப்பானவராக நியமனம் செய்தார் என்பதும், அவரது வழியினர்தான் சேதுபதி மன்னர்கள் என்பதும் பிறிதொரு செய்தி[2]

இந்தச் செய்திகள் வரலாற்றுக்கு முரண்பட்ட வகையில் அமைந்திருந்த போதிலும் சேதுபதி மன்னர்கள் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நிலைத்திருந்த தன்னரசு மன்னர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி இந்த மன்னர்களின் ஆட்சி இந்தப் பகுதியில் கி.பி. 15ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் இருந்ததாகத் தெரிகிறது[3]


  1. கீழ்த்திசை சுவடி நிலையம், சென்னை - சேதுபதிகள் உண்டான விதம் (MSS)
  2. Seshadri. Dr. - Sethupathis of Ramnad. (1974) thesis.
  3. James Fergusson - History India and the Eastern Architecture (1911).