உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சேதுபதி மன்னர் வரலாறு

பயணிகளிடம் ஒரு சிறிய தொகையை அன்பளிப்பாக வசூலித்து வந்தார். மன்னரது ஒப்புதல் இல்லாமல் தண்டத்தேவர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையைக் கேள்விப்பட்ட மன்னர் மிக்க ஆத்திரம் அடைந்தார். அதனை மிகப்பெரிய சிவத்துரோகமாகக் கருதித் தண்டத்தேவருக்கு மரண தண்டனை வழங்கினார். திருவாரூர்ப் புராணத்தில் சொல்லப்படுகின்ற மனுநீதிச் சோழனுக்கு ஒப்பாக இந்தச் சேதுபதி மன்னர் நடந்து கொண்டதால் அவரை மனுநீதி சேதுபதி என மக்கள் அழைத்தனர்.

இவ்விதம் நிர்வாகத்தில் மிகக் கடுமையான நேர்மையுடன் நடந்து வந்த இந்த மன்னர் உள்நாட்டு மக்களது அவலங்களைத் தீர்ப்பதற்கும் முயன்று வந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. மதுரைச் சீமையிலிருந்து கிழக்கு நோக்கிச் சேதுபதியின் சீமை வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமம் ஆகின்ற வைகை ஆற்றின் நீரினைச் செம்மையாக பயன்படுத்துவதற்காகத் திட்டம் ஒன்றை வகுத்து நிறைவேற்றினார். அதன் முடிவு தான் இராமநாதபுரம் நகருக்கு மேற்கே அமைக்கப்பட்டுள்ள பெரிய கண்மாய் என்ற நீர்த்தேக்கம் ஆகும். இதற்கு ஸ்ரீ இராமபிரானது பெயரால் இரகுநாத சமுத்திரம் என்று பெயர் சூட்டியதை அவரது செப்பேடு ஒன்றின் மூலம் அறியப்படுகிறது.

இதனைப் போன்ற மிகப் பரந்த வறண்ட நிலமாக காட்சியளித்துக் கொண்டிருந்த முதுகளத்தூர் வட்டத்தின் மேற்கு கிழக்குப் பகுதிகளை வளமைமிக்க கழனிகளாக மாற்றுவதற்கு மற்றுமொறு திட்டத்தை இந்த மன்னர் வகுத்தார். கமுதிக்கோட்டைக்குத் தெற்கே கிழக்கு மேற்காகச் செல்லும் குண்டாற்றின் வடகரையில் ஒரு கால்வாயினை அமைத்து அதன் மூலம் முதுகளத்தூர் இராமநாதபுரம் வட்டங்களின் பகுதிகள் குண்டாற்று நீரினால் பயனடையுமாறு செய்தார். இந்தக் கால்வாய்க்கு ரெகுநாத காவேரி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் கால்வாய் ஏறத்தாழ 30 கல் தொலைவில் கிழக்கேயுள்ள களரிக் கண்மாயில் முடிவடைகிறது.

இவர் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தார் என்பதற்குச் சான்றாக மதுரைச் சொக்கநாதப் புலவரின் பணவிடுதூது, தேவை உலா ஆகிய இருநூல்கள் இருந்து வருகின்றன.

இவ்விதம் சமுதாயத்திற்கும் தெய்வீகத்திற்கும் தமது அரசுப் பணியை உட்படுத்தி வந்த இந்த மன்னருக்கு எதிரியாகப் பவானி சங்கரத் தேவர் எழுந்தது ஆச்சரியம் இல்லை. ரெகுநாத கிழவன் சேதுபதியின் செம்பிநாட்டு மறவர் குல பெண்மணிக்குப் பிறக்காததால் சேதுபதி பட்டம் மறுக்கப்பட்ட பவானி சங்கரத் தேவர் புதுக்கோட்டை தஞ்சை மன்னர்களது உதவியுடன் இராமநாதபுரம் கோட்டையைப் பிடிப்பதற்கு முற்பட்டார். இவரை சேதுநாட்டின் வடக்கு எல்லையில் சந்தித்துப் பொருதுவதற்காக