பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

279



“பொஞ்சாதின்னு சொல்றே எங்கேன்னு தெரியாதா?”

“நாங்க கிதாரிங்க, ஆடுங்கதான் எங்களுக்கு எல்லாம்.”

“ஏங் கெடையெ ஒட்டிக்கிட்டு நான் இங்க வந்திருக்கேன். அவ கெடையெ ஓட்டிக்கிட்டு அவ எங்கயோ தெக்க திரிஞ்சுக்கிட்டிருக்கா வருஷத்துல ஒம்பது மாசம் இப்படி பச்சையெ தேடிக்கிட்டு ஆடுங்களுக்காக ஊர் ஊரா திரிஞ்சுகிட்டே இருக்க வேண்டியதுததான்” அவள் அசந்து போனாள். லோச்சனத்துக்கு சுதந்திர காற்றின் வேகம் மூச்சை முட்டியது. பலிஷ்ட்டமான அந்த கீதாரி ஆண் மகனைப் பார்த்தாள். கரு கருவென்று கருங்காலியில் செய்த சிலை போல இருந்தான்.

“அவளுக்கு வியாதிங்கிறியே...?

அத குணமாக்கலாம் தெரியுமா?

ஆஸ்பத்திரிக்கு அவளெக் கூட்டிகிட்டுப் போ ஒம் பொண்சாதி தானே?!”

“இப்போ அவளெ வேறொரு தோரி வெச்சுக்கிட்டான்” என்றான். அவள் தந்த காரமான டீயை உறிஞ்சியபடியே “டீ நல்லாருக்கு...” என்றான்.

“அவளுக்குக் குஷ்டம்ன்னு அவளுக்கேத் தெரியாதா? அவன் அவள பிரியமா வச்சுக்குவானா?...” என்றாள் லோச்சனம்.

“பிரியமான்னா. என்னங்க? புடிச்சு தானே வச்சுக்கிட்டான்” இடி இடித்தது. மழைக்குள்ளிலிருந்து மின்னல்கள் வெட்டி வாங்கின. .

ஜே... வென்ற மழையில் எதிரே தெரிந்த காவிரி ஆறு. பின்னால் தெரிந்த கோரை ஆறு. யாவும் மழை திரையில் மூடுண்டன. இருட்டிக் கொண்டு வந்த ஓலத்தில் இடிகள் குலுங்கின. பெருமழையின் காற்றில் அங்கு வளர்ந்துகிடந்த குத்துக்கள்ளிகள் அசைவுற்றன. சுற்றிலும் தெப்பமாய் நெனைந்து போன லோச்சனா வாசலை நோக்கி, ராகவனை எதிர்பார்த்தாள். இன்னும் பைத்தியமாய் இனியும் முட்டாளாய் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கே அவளது உடலின் கேவலம் மனதின் அசிங்கம் தெரியத்தான் செய்தது. அவளது வாழ்வில் இனிச் செய்ய வேண்டியது என்ன என்று சொல்லக்கூட அவளுக்குத் தேவைப்பட்ட பலவீனம் ஆச்சரியமாய் இருந்தது! மழையில் அவள் மேனியில் வரைந்திருந்த ஓவியங்கள் யாவும் சுத்தமாய் கலைந்து ஓடியிருந்தன. சுத்தமாக அவள் விரல்கள் முகம் யாவும் குளிரிந்து மலர்ந்திருந்தன. அவளது உடல் முழுவதும் ஆரோக்கியத்தின் தாதுக்கள் முண்டி எழுந்து கொண்டிருந்தன. அவள் இனி தொழு நோயாளி இல்லை! மனதிற்குள் இருந்து அவள் சுதந்திர காற்றை மீண்டும் சுவாசித்தாள்? இனி அவளால் அஞ்சினியில் இருக்க முடியாது. மனதிலே ஒரு பேரொளி எழுப்பி வானத்தை ரெண்டாக கிழித்தது.