பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நீலமேகம் திறந்துவைக்கக், கனகம்மையார் இராமசாமி கொடியேற்றினார். அண்ணா தான் வரவேற்புக் குழுவின் தலைவர். அழகர்சாமியின் சிறப்புரையும், எம்.ஆர். ராதாவின் நாடகமும் மாநாட்டில் பாராட்டுப் பெற்றன. இந்த மாநாட்டை ஓட்டி நடைபெற்ற ஊர்வலம், திட்டமிட்ட பாதையில் செல்லாதவாறு தடை செய்து. அரசு சிறுமதியைக் காட்டிக் கொண்டது. தொண்டர்கள் உணர்ச்சிமயமாய்க் தடை மீறத் துடித்தனர். பெரியாரோ தமது இயல்புக்கேற்ப, அரசு அனுமதிக்கும் வழியிலேயே செல்வோம் என்று அமைதிப்படுத்தினார். இதேபோல்தான் கடந்த ஜூலை 22-ஆம் நாள் புதுச்சேரியில் பாரதிதாசனால் துவக்கப்பட்ட திராவிடர் கழக விழாவுக்குப் பெரியார் சென்றபோது, அவர் உரை நிகழ்த்திய பின்னர், உள்ளூர்க் கயவர்கள் சிலர் கொடிமரத்தை வீழ்த்திக் கலவரம் செய்தனர். பெரியாரை ஒரு ரிக்‌ஷாவில் ஏற்றிப் பாதுகாப்பாக அன்பர் இராமலிங்கம் இல்லத்திற்குத் தோழர்கள் அனுப்பினார்கள். தனியே அகப்பட்டுக் கொண்ட மு. கருணாநிதி நையப் புடைக்கப்பட்டார் அங்கு “தொழிலாளர் மித்திரன்” இதழ் நடத்தி வந்த காஞ்சி கல்யாண சுந்தரம் தாக்கப்பட்டார். அப்போதும் பெரியார் அமைதி காத்து, அனைவரையும் ஆறுதல் பெறச் செய்து, அடுத்த நாள்வரை தங்கியிருந்து, பின்னர் ஈரோடு திரும்பினார்.

திருச்சி மாநாட்டில் பாடலாம் என்று பெண்ணாகரம் நடேசன் ஒரு பாடல் இயற்றிக்கொண்டு வந்திருந்தார். இன்னும் என்ன செய்யப் போறிங்க? சொல்லுங்க நீங்க! என்ற அந்தப் பாடலின் சந்தம் பெரியாரைக் கவர்ந்ததால், தாமே மெட்டமைத்துப் பாடிப் பார்த்தார். நன்றாக வந்தது. உடனே மகிழ்ந்து போய், அதில் 10,000 பிரதிகள் அச்சியற்றித் திருச்சி மாநாட்டில் விநியோகம் செய்தார்; பாடலும் பாராட்டுகளை ஏராளமாகப் பெற்றது!

தராசுக்கொடி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தந்த கொடி, அது புரட்சியின் சின்னமல்ல; மாற்ற வேண்டும் - என்பதாக ஒரு கருத்து திருச்சியில் உதயமாயிற்று. பின்னர் பெரியார் கேட்டுக் கொண்ட வண்ணம், பலரும் டிசைன் அமைக்க முயன்றனர். “குடி அரசு" உதவி ஆசிரியராக அப்போது ஈரோடு வந்திருந்த மு. கருணாநிதி, கருப்புமையும், தன் விரலின் நுனியிலிருந்து எடுத்த இரத்தமும் கொண்டு, இப்போதுள்ள திராவிடர் கழகக் கொடிக்கு வடிவமைப்பு எழுதித்தந்தார். அதுதான் பின்னர் 27-4-1946-ல் பெரியார் அங்கீகாரம் பெற்றது.

இனி திராவிடர் கழகத்துக்குப் பெரியார்தான் நிரந்தரத் தலைவர் எனத் திருச்சி மாநாடு தீர்மானம் இயற்றியது.

திராவிட விடுதலைப் படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்குத் தேவை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் ஈரோடு திரும்பியதும், இதைப்பற்றி மேலும்