பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



சுயராஜ்ய ஆட்சி என்ற பெயரால் கடைந்தெடுத்த முதலாளிகள் ஆட்சிதான் டெல்லியிலும், சென்னையிலும் நடைபெறுகின்றன என்பதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி, 1948 சனவரித் திங்களில் தாம் சுற்றுப் பயணம் செய்க எல்லா ஊர்களிலும் பெரியார் சொற்பொழிவாற்றுகையில், ஏழைப் பங்காளரான காந்தியார், பிர்ஸா மாளிகையில் தங்குவதும்; பெரும் முதலாளியான ஆர்.கே. சண்முகம் நிதி மந்திரியாக விளங்குவதும் நியாயமா என்று கேட்டார். சுய ஆட்சி என்பதைவிட, நல்ல ஆட்சியையே தாம் விரும்புவதாகக் கூறினார். 100க்கு 88 பேராகவுள்ள பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோருக்குப் பிரதிநிதித்துவம் தரப்படாத கொடுமையை விவரித்தார்.

காந்தியார் படுகொலை நிகழ்ந்து விட்டது! அவரது வர்ணாசிரம தர்ம மோகத்தையே பெரியார் கண்டித்து வந்தார். ஆனால் பார்ப்பனரல்லாதாரான காந்தியார்மீது அளவற்ற பற்றுதல் கொண்டவர் பெரியார். சித்தம் கலங்கிவிட்டார். நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் 1948 பிப்ரவரி 29-ஆம் நாள் காந்தியாருக்காக அனுதாபக் கூட்டங்கள் நடத்திட அறிவித்தார். 31-1-48 “விடுதலை” ஏட்டில், மனம் பதறி அறிக்கை விட்டார். தொடர்ந்து பிப்ரவரிமாதம் முழுவதும் காந்தியாரைப் பற்றியே பேசியும், எழுதியும் வந்தார். காந்தியார் பாலூற்றி வளர்த்து வந்த பார்ப்பனீயப் பாம்பே அவரைத் தீண்டிய நன்றி கொன்ற செயவை வெளிப்படுத்தினார். கோட்சே, பார்ப்பனன் என்பதை மறைத்த, “இந்து”, “மித்திரன்” பத்திரிகா தர்மத்தை அம்பலமாக்கினார். “அய் ஹாவ் நோ பிலீஃப் இன் பர்சனல் காட்” என்று சொன்ன காந்தியாரின் சாம்பலை ஊரூராய்க் கரைத்த மூடத்தனத்தைக் கண்டித்தார். காந்தியாருக்கு நினைவுச் சின்னமாக, இந்தியாவுக்கு காந்திஸ்தான் அல்லது காந்திதேசம் என்றும், இந்து மதத்துக்குக் காந்தி மதம் என்றும், நமது ஆண்டுக் கணக்குக்குக் காந்தி ஆண்டு என்றும், பெயர் மாற்றலாமெனப் பெரியார் ஆலோசனை வழங்கினார். இந்தப் பெருந்தன்மையைப் புரிந்து கொள்ளும் ஆற்றலின்றி, நேரு குழுவும் பட்டேல் குழுவும் தமக்குள் போராடிக் கொண்டிருந்தன, டெல்லிப் பட்டணத்தில்!

எல்லாவற்றுக்குமே கருஞ்சட்டைக்காரர்தான் காரணம் என்று இங்குள்ள பத்திரிகையாளர் தூண்டி விட்டதற்கிணங்க, சென்னையிலிருந்த ஓமந்தூரார் அரசு, திராவிடர் கழகத்தின் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டது. கிரிமினல் சட்டத் திருத்தம் 15-ஆவது பிரிவின்கீழ்க் கருப்புச்சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்டது. கழக அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள், கழகத்தார் இல்லங்கள்யாவும் சோதனைக்குள்ளாயின. கருப்புச்சட்டைப் படை என்பதாக ஒரு படை இல்லை என்று எடுத்துக்காட்டியும் கேட்பாரில்லை. ஆகையால் பெரியார் இன்னும் விளக்கமாக - என்னை