பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

200



1948-செப்டம்பர் 11-ஆம் நாள் ஜின்னா மறைவு குறித்துப் பெரியார் பெரிதும் மனம் வருந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தி எதிர்ப்பு மறியல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் 14-9-48 அன்று அய்தராபாத்தில் இந்தியப் போலீசு நுழைந்த செய்தி கிடைத்தவுடன், அரசுக்கு இந்த நேரத்தில் தொல்லை தரவேண்டாம் என்ற நன்னோக்கத்தில், தற்காலிக மறியல் நிறுத்தம் செய்தார் பெரியார். ஆனால் 15-9-48 ஒருநாள் மட்டும் எல்லா ஊர்களிலும் அடையாள மறியல் செய்யப் பணித்தார். (அன்று திருவாரூரில் தயாளு அம்மையாரை மணந்த மு. கருணாநிதி மணக்கோலத்திலேயே அடையாள மறியலில் பங்கேற்றார்.) “விடுதலை” பத்திரிகைக்கு 2000 ரூபாய் அரசு கேட்ட ஜாமீள் தொகை பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் 4000 ரூபாய் கேட்கப்படலாம் என்ற சூழ்நிலையில், கழகத் தோழர்கள், ஈடாகப் பதினைந்தாயிரத்துக்கு மேல் நன்கொடைத் தொகை அனுப்பிப், பெரியாரிடம் தங்களுக்கு உள்ள நம்பிக்கையைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

தூத்துக்குடியில் அண்ணா கலந்து கொள்ளாதது ஒரு குறைதான். அவரை அப்படியே ஒதுங்கிச் செல்ல விடக்கூடாது என்று பெரியாருக்கு அணுக்கமான சில தோழர்கள் - பி. சண்முக வேலாயுதம், தவமணி இராசன், கருணானந்தம் போன்றோர் - கூறிய யோசனையைப் பெரியார் ஏற்றுக்கொண்டு, அண்ணா தலைமையில் ஈரோட்டில் 19-வது மாகாண திராவிடர் கழகத் தனி (ஸ்பெஷல்) மாநாடு 1948 அக்டோபர் 23, 24 தேதிகளில் ஏற்பாடு செய்துவிட்டார். அண்ணாவையும் பிற தலைவர்களையும் இரட்டைமாட்டுச் சாரட்டு வண்டியில் அமர்த்திப், பெரியார் ஊர்வலத்தில் நடந்தே வந்தது கண் கொள்ளாக் காட்சி! கருப்புச் சட்டைபோட்டு, மேல் துண்டை இடுப்பில் கட்டி, வியர்க்க விறுவிறுக்கத் - தூத்துக்குடித் தொண்டர் படைத் தலைவரான கே.வி.கே. சாமி அதிசயிக்கப் - பெரியார் சிங்க ஏறுபோல் ஈரோடு வீதிகளில் நடைபோட்டார்!

மாநாட்டை எஸ். குருசாமி தொடங்கி வைக்க, சென்னை இந்திராணி பாலசுப்ரமணியம் கொடி உயர்த்தினார். திருவள்ளுவர் படத்தைப் பெரியாரும், திராவிட நாடு படத்தைத் திரு.வி. கல்யாண சுந்தரனாரும், காந்தியார் படத்தைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், சிங்கார வேலர் படத்தை என்.வி. நடராசனும், தியாகராயர் படத்தைத் தி.பொ. வேதாசலமும், நாகம்மையார் படத்தை அழகிரியும் (அவருக்கு அதுதான் கடைசி மாநாடு) தாளமுத்து நடராசன் படத்தை ஏ.வி.பி. ஆசைத்தம்பியும், பன்னீர் செல்வம் படத்தை ஏ. சித்தையனும், சுந்தரனார் படத்தை இரா. நெடுஞ்செழியனும், என். அர்ச்சுனன் படத்தை சி.டி. டி. அரசுவும் திறந்து வைத்தனர். (உண்மையில் மாநாட்டில் ஒரு படமும் வைக்கப்படவில்லை. கற்பனையாய்க் காணவேண்டும் என்று பெரியார்