பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

214


“விடுதலை” ஏட்டின் மீது தொடரப்பட்ட வழக்கில், 9.3.50 அன்று வாதம் தொடங்கி, 24ந் தேதி பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது! ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி இந்தி எதிர்ப்பு நாள் கொண்டாடி, இன்னும் கட்டாய இந்தி ரத்து செய்யப்படாததைப் பெரியார் நினைவூட்டி வந்தார். கடைசியில் 18-ந்தேதி, கட்டாய இந்தித் தொல்லை ஒழிந்தது என்று 1950 ஜூலை 20-ம்நாள் “விடுதலை”யில் பெரியார் தலையங்கம் எழுதி மகிழ்ந்தார்.

மார்ச் 18, 19 நாட்களில் சென்னை மாவட்ட திராவிடர் கழக 15-ஆவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. பெரியாருடன் தி.பொ. வேதாசலம், ஏ.பி. சனார்த்தனம், எஸ். குருசாமி, சி.இலக்குவனார், எம்.ஆர். ராதா, திருவாரூர் தங்கராசு ஆகியோர் பங்கு பெற்றனர். ஏப்ரல், மே மாதங்களில் பெரியார் தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று, கட்டாய இந்தி, திராவிட நாட்டுப் பிரிவினை, வகுப்புவாரி உரிமை, காங்கிரசின் கொடுமை ஆகிய பொருள்கள் குறித்து நாட்டு மக்களுக்கு நல்ல வண்ணம் விளக்கி வந்தார். ஜூன் 22-ஆம் நாள் காய்ச்சலால் தாக்குண்டு, திருச்சியில் சில நாள் ஓய்வெடுக்க நேரிட்டது. பிறகு சென்னை சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார் பெரியார். உடல் சிறிது நலம் பெற்றதும் புறப்பட்டு விட்டார். திருப்பூரில் இந்தி எதிர்ப்பு நாளில் கலந்து கொண்டார் பெரியார். நாம் பொதுவான சங்கதிகளில் மட்டும் காலத்துக்கேற்ற மாறுதல்களை ஒப்புக் கொள்கிறோம்; ஆனால் ஆத்மார்த்த, சமுதாயக் காரியங்களில் இன்னும் காட்டுமிராண்டிக் காலத்தில்தான் இருந்து வருகிறோம் - என்று பெரியார் தக்க மேற்கோளுடன் விரித்துரைத்து வந்தார். இந்த நேரத்தில் பஞ்சாபில் மாஸ்டர் தாராசிங் சீக்கிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு கேட்கத் துவங்கியதைப் பெரியார் வரவேற்று ஆதரித்தார். கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து திரும்பி, பென்ஷன் பெற்று வந்த ராஜாஜி, மீண்டும் டெல்லி சென்று, இலாக்கா இல்லாத மந்திரியாக, நேரு மந்திரி சபையில் இணைந்தார்.

பெரியார் பொன் மொழிகள் என்ற நூல் ஆட்சேபகரமானது என்று மார்ச் மாதம் பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கு, 10 முறை ஒத்திப் போடப்பட்டு வந்தது. 22.7.50 அன்று கடைசியாக வாய்தா தந்தார்கள். அரசியலில் தமக்கு நாட்டம் எப்போதுமில்லை , சமுதாய இழிவு ஒழிப்பே முக்கியம் என்பதை அன்று ஈரோட்டில் பெரியார் வலயுறுத்தினார். அரசின் சில துறைகளில் கட்டாயம் கதர் உடைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மாற்றிக் கைத்தறி உடைகளோ, மில்துணி உடைகளோ வழங்கலாம் என்ற நிலையைப் பெரியார் வரவேற்றார்.

சென்னை மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் பார்ப்பனர் 2.7 சதவீதம் பேர்தான். ஆனால், 1949-50-ஆம் கல்வி