பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

240




குடந்தைக் கல்லூரியில் பார்ப்பன பிரின்சிபாலின் அட்டூழியங்களையும், வாஞ்சூகமிஷன் சென்னையைப் பொதுத் தலைநகராக்கலாம் என்று பரிந்துரை செய்த அக்கிரமத்தையும், காமராசருக்குக் காங்கிரஸ் மத்தியக் காரியக் கமிட்டியில் இடந்தராத அநீதியையும், முதல் தமிழராசு வி.என். சுப்பராயன் சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டதையும், இங்கிருந்த 69 ஐ.சி.எஸ். அதிகாரிகளில் 44 பார்ப்பனர், 6 கிறிஸ்துவர், 2 வெள்ளையர், 1 வெளிமாகாணத்தார் போகப் பார்ப்பனல்லாதார் 4 பேர் என்ற கொடுமையையும், 29 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 19 பார்ப்பனர், 3 மலையாளி, 1 கிறிஸ்துவர், தமிழரும் மற்றோரும் சேர்ந்து 5 பேர்தான் என்ற நிலைமையையும் “விடுதலை” வெளிச்சம் போட்டுக் காட்டியது. 16.2.53-ல் பெரியாரும், எம். பக்தவத்சலமும் தமிழக உரிமைப் பாதுகாப்புக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டனர்.

திருச்சியில் 15.2.53 அன்று நடந்த திராவிடர் கழக நிர்வாகக் குழுவில், 22-ந் தேதியன்று வாஞ்சூ அறிக்கைக் கண்டனநாள் கொண்டாடி, முழுக்கடையடைப்பும், வேலை நிறுத்தமும் நடத்திட முடிவெடுக்கப்பட்டது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாதுக்கு எஸ். குருசாமி தலைமையில் கருப்புக்கொடி பிடிப்பதென்றும், பெரியார் மேற்பார்வையிடுவதென்றும் முடிவு. இம்மாதிரிச் சிக்கல்களுக்குக் காரணமே பிரதமர் நேருதான் என்றும், விருந்தாளி சர்க்கார் (ஆந்திரா) சென்னையில் தங்கவேண்டாம் என்றும் பெரியார் சாடினார். அன்றைய தினம் (22.2.53) டபிள்யூ. பி.ஏ. சவுந்தர பாண்டியனார் மறைந்து போனார். பெரியாரும் மணியம்மையாரும் கையெழுத்திட்டு, அனுதாபத் தந்தியை அன்னாரின் குடும்பத்துக்கு அனுப்பினர்.

1947-ல் சுதந்திரத் தமிழரசு கேட்கத் தமிழரசுக் கழகம் கண்ட ம.பொ.சி. 1953-ல் வெளியார் சுரண்டலற்ற தமிழகம் அமைந்தால் போதும் என்கிற அளவுக்குத் தமது கொள்கையைச் சுருக்கிக் கொண்ட போதிலும்; அவர் காங்கிரசில் இருந்து கொண்டே, பிரச்னைக்குரிய விஷயங்களைச் சொல்கிறார் என்று கருதி, அவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்கக், காங்கிரஸ் மேலிடம் அனுமதி மறுத்தது. 3.3.53 அன்று மதுரையில் பேசிய முதலமைச்சர் ராஜாஜி, பெரியார் மிகுந்த நுண்ணறிவு படைத்தவர்; பொதுத் தொண்டும் தன்னலமற்ற தன்மையுமே எங்களிருவரையும் பிணைத்தது என்று பெரியாரைப் பாராட்டினார். கவர்னர் ஸ்ரீ பிரகாசா, “திராவிடர் கழகம் இந்தியை எதிர்த்தாலும் அதில் அவர்களுக்கு உள்ள ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன். தவறான கொள்கைக்கு இடைவிடாத உழைப்பை வீணாக்குகிறார்களே என அனுதாபப்படுகிறேன்” என்றார். சென்னை சட்ட மன்றத்தில், ஏ. கோவிந்தசாமி, திராவிட நாடு திராவிடருக்கே ஆகவேண்டுமெனக் கோரும் உத்தியோகப் பற்றற்ற தனியார் தீர்மானம்