பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

467


நடவடிக்கையை வாபஸ் பெறவில்லையா? நான் தானே அப்போதும் தாக்குதலுக்கு உள்ளானவள்! கத்தி எடுத்துக் காலிகளைக் குத்துங்கள் என்று துணிச்சலாகச் சொன்னது நான்தானே? என்னுடைய காரை மறித்துச் சேதப்படுத்தினார்கள். 3,000 ரூபாய் ரிப்பேர் செலவு ஆனது. அப்படியிருந்தும் அன்றையப் போலீஸ் மந்திரி (எம் பக்தவத்சலம்) என் அறிக்கையைப் பறிமுதல் செய்தார். அதிகாரிகளை அனுப்பி, என்னைத்தான் மிரட்டினார். சரி, அண்ணா மந்திரிசபை இராஜினாமாச் செய்துவிட்டால் அப்புறம் என்ன ஆகும்? சிந்தியுங்கள்! ” என்று பெரியார், உருக்கமிகக் கேட்டிருந்தார். இடையிலே குறுக்கிட்ட ராமநவமியையும் மறக்காமல் “மானமுள்ள தமிழர்கள் ராமநவமி கொண்டாதீர்கள், இராமாயணக் கதை கடவுள் கதை அல்ல. இராமன் மெய்யன் அல்ல!” என்று எழுதினார்.

“1968 ஏப்ரல் 14-ஆம் நாள் டில்லி ஆதிக்கக் கண்டன நாளை நம் சுதந்திர எழுச்சி நாளாகக் கொண்டாடுங்கள்! பொதுக் கூட்டங்கள் நடத்தி, வகுப்பு நீதிக்காகவும் வகுப்புரிமைக்காகவும் தமிழர் சுயமரியாதைக்காகவும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருந்து பிரிந்து, சுதந்தரத் தமிழ்நாடாக வேண்டியது அவசியமாகும், என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். கிராமந்தோறும் ஊர்வலங்களும் நடத்துங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் தெற்கு ஆதரவு தாருங்கள். நாடெங்குமிருந்து கண்டனத் தீர்மானங்கள் குவியட்டும்" என்று பெரியார் 4, 5 தேதிகளில் எழுதியிருந்தார். 7-ந்தேதி நண்பகல் வீடு திரும்பி, அன்று மாலை நேரு ஸ்டேடியத்தில் ஜி.டி. நாயுடுவின் 75-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். சென்னை மேயர், அங்கேயே நாயுடுவுக்கு வரவேற்பளித்தார். பி.டி.ராஜன் தலைமையில் பெரியார், அண்ணா , காமராஜர், ஓமந்தூரார், மத்திய அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர். வி. ராவ் ஆகியோர் பாராட்டுரை பகர்ந்தனர். கருமுத்து தியாகராயச் செட்டியார் பொன்னாடை போர்த்தினார். 7 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. கி.ஆ.பெ. விசுவநாதம் நன்றியுரைத்தார்.

“இந்த மந்திரிசபையை மாற்ற நினைப்பது கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும். தமிழர்களின் நல்வாய்ப்பாக இப்போது அண்ணாவின் ஆட்சி வந்தது. யார் ஆண்டாலும், தமிழ் நாடு தனியாகப் பிரிந்தே ஆகவேண்டும். நாம் தனியாகப் பிரிந்தால், ராணுவச் செலவு குறைந்து, இப்போது போல பெரிய சுமையாக அது நம் தலையிலும் விழாமலாவது இருக்குமோ” என்று 8-ந் தேதியும், “மதுவிலக்கு ஒரு முட்டாள்தனமான சீர்திருத்தம். மதுவைத் தடை செய்வதற்குப் பதிலாக அதில் நிறையச் சத்து இருப்பதால், நல்ல பயனுள்ள உணவாக அதை மாற்றலாம்” என்று 9ந் தேதியும் “தமிழா! நீக்ரோக்களைப் பார்! 18 கோடி