பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

523



மேலும், இராஜாஜி பெரியாரைப்பற்றி, என்ன சொன்னாராம்: "என்னை யோக்கியமானவன், உண்மையானவன் என்று இராஜாஜி கூறியதாகத் "தினமணி" ஏடு தெரிவிக்கிறது. அவரைப்பற்றியும் நானும் அப்படியேதான் கருதிக்கொண்டு இருக்கிறேன். நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற தொண்டிற்கு ஏற்பக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது எங்கள் கடமையாகப் போய்விட்டதே" என்றார் பெரியார்!

பிற்படுத்தப்பட்டோர் நலம்பற்றி ஆராயத் திரு. ஏ.என். சட்டநாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் என்.வி. நடராசன், 17-ந் தேதி தெரிவித்தார். இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர், பெரியாரின் கட்டளையை ஏற்றுப் பெயர் கொடுத்தோர், பட்டியல் 17-ந் தேதி முதல் “விடுதலை"யில் பத்தி பத்தியாய் வெளிவரத் தொடங்கிவிட்டது. ஊக்கம் பெற்ற பெரியார் 18, 19 நாட்களில் இரு தலையங்கக் கட்டுரைகள் தீட்டினார். மூலஸ்தானப் பிரவேசம் என்பது தலைப்பு:- மூலஸ்தானத்தில் எல்லா மக்களும் பிரவேசிக்கக்கூடாது என்பது கோயில் சம்பந்தமாக, அல்லது ஒது பொது இடம் சம்பந்தமாக, அரசாங்கத்தார் செய்து கொண்ட ஒரு ஏற்பாடுதானே ஒழிய, அது எந்தவிதத்திலும் ஒரு மதசம்பந்தமான தத்துவமாகாது. கோயிலுக்குள்ளாகவோ, மூலஸ்தானத்திற்குள்ளாகவோ இன்ன மதத்தார்தான், இன்ன சாதியார்தான் செல்லலாம்; இவரிவர் செல்லக்கூடாது என்பதற்கு எந்தச் சட்டமும், மத ஆதாரமும், சரித்திர நியமமும் இல்லை. இன்ன மொழியில்தான் பூசைக்குச் சொற்கள் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. கோயில் நிர்வாகத்துக்கு, டிரஸ்டி பதவிக்கு இன்ன சாதியாகத்தானிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நிர்ப்பந்தமுமில்லை. மதவிரோதமும், சாஸ்திரவிரோதமும், சட்டவிரோதமும் இல்லை.

நான் நாஸ்திகக் கொள்கை உடையவனாக இருந்து கொண்டே, சுமார் 20 ஆண்டுகாலம் ஈரோடு, கோபி, பவானி, திருப்பூர் தாலுக்காக்களின் தேவஸ்தானக்கமிட்டித் தலைவராக இருந்திருக்கிறேன். இவன் நாஸ்திகன் என்று கலெக்டரிடம் புகார் செய்தபோது கூட, அவர் சிரித்துக்கொண்டே இந்துதானே? என்று கேட்டிருக்கிறார். இன்றும் விஷ்ணு கோயில்கள் பலவற்றில் நாம் வெளியிலிருந்து கையை நீட்டினால், எட்டக்கூடிய தூரத்தில் சிலை இருக்கக் காணலாம். பூசாரிக்குக்கூட, நெற்றியில் நாமமோ, விபூதியோ இருக்க வேண்டுமே யொழிய, அவன் ஸ்நானம் செய்து, சுத்தமாக உடுத்திவரவேண்டும் என்ற திட்டங்கூட இல்லை. நெற்றிக்குறி என்பதும், அதிகாரத்தாலும் செல்வாக்காலும் ஏற்பட்டதேயொழிய, அதற்குச் சட்டமோ சாஸ்திரமோ நிர்பந்தமோ கிடையாது. ஆக, மூலஸ்தானப் பிரவேசத்திற்கும், கர்ப்பக்கிரகப் பிரவேசத்திற்கும் சட்டம், சாஸ்திரம் ஒன்றும்