பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



பெரியார் பேசும் போது, “இந்திய வரலாற்றில் வேறெந்த ஆட்சியாளரும் சாதிக்காத அருஞ்சாதனைகளைச் சாதித்துக் காட்டியவர் அறிஞர் அண்ணா, ஒரு பகுத்தறிவு ஆட்சியை நிறுவியது சாதாரணம் அல்ல. அண்ணா பகுத்தறிவாளர் ஆகையினால், சாதி மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தயவு செய்து அவர் சிலையைத் திறக்காதீர்கள். கடவுள் இல்லாமல் ஒரு மயிர்கூட அசையாது என்று நம்பிக்கையோடு சொல்கிறவன்; இவன்தானே சீப்பை எடுத்துச் தன் தலையைச் சீவிக் கொள்கிறான்? நம்மை ஒரு நாய் கடித்தால், நாயைக் கோபிப்பதில்லை; நாயை ஏவிவிட்டவனைக் கோபிக்கிறோம். அதைப்போல் நம்மை ஒரு மனிதன் அடித்தால், ஏவிவிட்ட கடவுளைக் கோபிக்காமல், நம்மை அடித்த மனிதனையேதானே கோபிக்கிறோம். இது எப்படி நியாயமாகும்? என்னிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து, கொஞ்சம் அவகாசம் தந்தால், கழுதையைக்கூட மகாத்மா ஆக்கிக் காட்டுவேன் நாம் சாதாரணமாக ஒரு பொருளைத் தொலைத்துவிட்டால், தொலைந்த இடத்தில்தானே தேடுவோம். அதே போல் நாம் நமது அறிவைத் தொலைத்த இடமாகிய கடவுள் சாஸ்திர புராணங்களில்தானே தேடவேண்டும்?" என்றெல்லாம் அற்புதமான கருத்து விளக்கம் செறிந்த உரை நிகழ்த்தினார் பெரியார்.

"விடுதலை" மேனேஜராக இருந்த தாதம்பட்டி எம். ராஜாக்குப் பதிலாக, நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம் 1-11-70 முதல் மேலாளர் எனப் பெரியார் கையெழுத்துடனான “விடுதலை” செய்தி தெரிவித்தது. சென்னை குருநானக் கல்லூரிக் குழுவின் செயலாளர் பி.என். தவான் அண்ணாவைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொன்னார். அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, குடிசைகள் தீப்பிடித்து எரிந்தன அல்லவா? அப்போது நிவாரண நிதியாக சீக்கியர்கள் சங்கத்தில் முதல்வர் அண்ணாவிடம் 10,000 ரூபாய் நன்கொடையாக வழங்க முன்வந்தபோது, பெற்றுக்கொண்ட அண்ணா , “இந்த சீக்கிய சமுதாயம் போர் முனையில் நமக்காகக் காலமெல்லாம் இரத்தம் சிந்துகின்ற வீர சமுதாயம். இந்தத் தியாக வரலாறு படைக்கும் மக்கள் தந்த 10 ஆயிரம் ரூபாய்க்காக, நான் நன்றி சொன்னால், இவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?" என்று பெருந்தன்மை துலங்கப் பேசினாராம்.

பெரியார் பம்பாய் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு, 8-11-70 சிவகங்கை நிகழ்ச்சிக்குச் சென்றார். பண்ணுருட்டியில் பேசும் போது, “தி.மு.க. ஆட்சி நடப்பதால் தான் நாம் இப்போது நாடெங்கும் பகுத்தறிவாளர் மன்றங்கள் திறக்க முடிகின்றது. வேறு ஆட்சியாக இருந்தால் இந்த நேரம் தடை போட்டிருப்பார்களே" என்றார் பெரியார். “இராஜாஜி (ஒப்பாரி) அழுகை” என்ற மகுடத்தின் கீழ் “சுதந்திரமும்