பக்கம்:தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொதுவாக அறிஞர்கள் தமிழக வரலாற்றைச் சங்க காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், நாயக்கர் காலம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் எனத் தனித்தனியாகப் பிரித்தே ஆய்வு நூல்களை எழுதியுள்ளனர். ஆனால் கே.கே. பிள்ளை அவர்கள் தமிழக வரலாற்றை ஒருசேர முழுவதும் ஆய்வு செய்து இந்நூலைப் படைத்துள்ளார். எனவே, இந்நூல் தனிச்சிறப்புடையதாகும். இந்நூல் ஆறாவது பதிப்பாக இப்போது வெளிவருவதே இதன் சிறப்பினை உணர்த்துவதாகும்.

அரிய செய்திகளின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் இந்நூலில் எண்ணற்ற கருத்துகளை மிகச் சிறப்பாகப் புலப்படுத்தி யுள்ளார் பிள்ளையவர்கள். வாழ்வியலுக்குப் பொருந்தும் வகையில் வரலாறு அமையவேண்டும் என்ற கோணத்தில் இந்த நூல் அமைந்துள்ளது. தொல்பழங்காலம் என்று குறிப்பிடப்பெறும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை (Pre-Historic Period) மிகச் சிறப்பாக எடுத்து இயம்பியுள்ளார். குமரிக்கண்டம் அதன் வழியிலான தமிழக வரலாற்றின் தொன்மை ஆகியவை குறித்து திரு.பி.டி. சீனிவாச ஐயங்காருடைய கருத்தினை ஏற்றுப் பிள்ளையவர்கள் இவ்வரலாற்று நூலைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்தக் கருத்துகள் அனைத்தும் முழுமையாக அனைவராலும் படிக்கப்பட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். அரிய நூல்களை அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பணிகளைப் பாராட்டி மகிழ்கிறேன்.

சென்னை அன்புடன்

20-11-2002 மு. தம்பிதுரை