பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சி.என். அண்ணாதுரை இசைத் தமிழின் இலட்சண விளக்கமாகச் சிகண்டியார் என்பவர் இசைநுணுக்கம் என்ற நூலையும், நாடகத் தமிழுக்குச் செயிற்றியன் என்ற நூலைச் செயிற்றியனார் என்பவரும் இயற்றினர். ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம்,நுஷாதம் என்று வடமொழிப் பெயர்களுடன் உள்ள சுரம் ஏழும், ஏழிசை என்ற பொதுப் பெயருடன் முறையே குரல், துத்தம், கைகிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயருடன் முன்னம் விளங்கின. தமிழர் ஒரு சுரத்தை பதினாறாகப் பகுத்துணரும் பக்குவமும் பெற்றிருந்தனர். ராகம் என்று கூறப்படுவது, தமிழரால் பண் என்று குறிக்கப்பட்டு வந்தது. ராக லட்சணங்கள் பொருந்திய தமிழ்ப் பாடல் இல்லை என்று கூறுவோருக்குக் கூறுகிறோம். தமிழரின் பண்கள் எண்ணற்று இருந்தன. வடமொழியில் கரகரப்பிரியா எனக் குறிப்பிடப்படுவதே படுமலைப் பாலைப்பண் என்றும்; கல்யாணி எனும் ராகம் அருபாலைப்பண் என்றும் முன்னாளில் குறிப்பிடப்பட்டது. அரிகாம்போதிக்கு தமிழர் அளித்த பெயர், கோடிப்பாலைப்பண்; பைரவிக்கு விளரிப் பாலைப்பண்; தோடிக்கு செவ்வழிப் பாலைப்பண் என இங்ஙனம் ராக லட்சணங்கள் எவ்வளவோ தமிழில் இருந்தன; மறைந்தன! ஆரியத்தால் மங்கின; அழிந்தனவும் உண்டு. ஆலாபனம் எனும் இசை நுணுக்கத்தைத் தமிழர் ஆலத்தி என்று அழைத்து வந்தனர். ஆரோகணம். அவரோகணம், கமகம் என்பன முறையே ஏற்றம், இறக்கம், அலுக்கு என்ற பெயருடன் விளங்கின. தமிழர் அவைகளில் தேர்ச்சி பெற்று, தேன் தமிழை உண்டு வாழ்ந்து வந்தனர். இன்று இரவல் இசை பெறும் நிலையில் உள்ளனர்.