பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

முஸ்லிம்களால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கிய வடிவங்களை இனங்காட்ட வந்த இந்நூலாசிரியர் அவற்றை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரித்துள்ளார்கள். இஸ்லாமியப் பெயர்களால் அழைக்கப்படும் இலக்கிய வடிவங்களை ஒரு பகுதியிலும் தமிழ்ப் பெயர்களால் சுட்டப்படும் இலக்கிய வடிவங்களை ஒரு பகுதியிலும் அமைத்துக் கொண்டுள்ளார் இந்நூலாசியர் 'கலை மாமணி மணவை முஸ்தபா' அவர்கள். இஸ்லாமியப் பெயர்களால் அழைக்கப்படும் இலக்கிய வடிவங்கள் மூன்று அரபுப் பெயர்களையும் ஒன்று பாரசீகப் பெயரையும் கொண்டிப்பதைக் காணலாம். முனாஜாத்து (இறை வனிடம் இறைஞ்சுதல்), மஸ் அலா (வினா விடை), கிஸ்ஸா (கதை சொல்லுதல்) என்பன அரபுப் பெயர்களைக் கொண்டு தமிழில் வழங்கும் இலக்கிய வடிவங்களாகும். நாமா (சரிதை) என்பது பாரசீகச் சொல்லால் அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வடிவமாகும். தமிழ்ப் பெயர்களைக் கொண்டுசுட்டப்படும் முஸ்லிம்களால் புகுத்தப்பட்ட தமிழ் இலக்கிய வடிவங்கள் படைப்போர், நொண்டி நாடகம், திருமண வாழ்த்து என்பவையாகும். தமிழ் மொழிகளால் அழைக்கப்படும் இலக்கிய வடிவங்களையும் இந்நூலாசிரியர் இங்கே நுணுக்கமாக விவரித்துள்ளார். உரிய இடங்களில் தேவைக்கேற்ப மேற்கோள்களையும் காட்டிச் செல்கின்றனர்.

அரபுத் தமிழை எட்டாவது பிரிவாகக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் ஆரம்பகால முஸ்லிம் மக்கள் சமயச்சூழல்களுக்கேற்ப தமிழ் மொழியை அரபு எழுத்துக்களில் எழுதும் பணியை மேற்கொண்டனர். அல்குர்ஆன் ஓதத் தெரிந்த முஸ்லிம்கள் அந்த அல்குர்ஆன் மொழியான அரபு மொழியில் எழுதப்பட்ட எதையும் வாசிக்க முற்பட்னர் . அத்தகைய நூல்களைப் போற்றிப் பாதுகாத்தனர். அங்ஙனம் அரபுத் தமிழ் மரபு தமிழில் புகுத்தப்பட்டமையாலேயே தமிழ் இலக்கியத்தில் அரபுச் சொற்கள் திசைச் சொற்களாக அமையும் பேற்றைப் பெற்றன. அதன் பயனாகேவ இனாம், மதில்,