பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

களில் தங்கி வணிகம் செய்ததோடு, இங்குள்ள மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் நிலையை அடைந்தவர் என்பது வரலாறு.

தமிழ் மக்களுடன் உதிரக் கலப்புடன் ஒன்றுபட்டு விட்ட அராபியர்கள் தமிழர்களை ஏற்றதுபோல் தமிழ் மொழியையும் ஏற்றார்கள். தமிழைக் கற்று அதனை அரபி வரிவடிவில் (லிபி எழுதவும் செய்தனர். செம்மையிலா நிலையில் அரபிகள் பேசிவந்த தமிழை வரிவடிவில் எழுத நேர்ந்த போதெல்லாம் தாங்கள் நன்கறிந்திருந்த தங்கள் தாய் மொழியாகிய அரபி மொழி வரிவடிவிலேயே தமிழை எழுதி வருவதை வழக்கமாகக் கொண்டனர்.

அண்ணல் நபிகள் நாயகம் காலத்துக்கும் பின்னர் தமிழகம் வந்த அராபியர்கள் இஸ்லாமியக் கருத்து களை தமிழ் மக்களிடையே எடுத்துச் சொல்லும் கடப்பாடுடையவர்களானார்கள். அப்போது இஸ்லாமிய சிந்தனைகளை இங்குள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வதற்கு அரபி மொழி வரிவடிவிலமைந்த தமிழே அவர்கட்கும் பெருத்துணையாயமைந்தது

அரபுத் தமிழின் விரைவான வளர்ச்சிக்கு வேறுசில காரணங்களும் உண்டு. அரபி மொழியில் இருந்த இஸ்லாமியத் திருமறையான திருக்குர்ஆனை-திருமறை விளக்கங்களை வேற்று மொழியில் பெயர்க்கும்போது கருத்துப் பிழையோ, பொருட்பிழையோ ஏறபட்டுவிடும் என்ற அச்சம் ஆரம்பத்தில் சற்று அதிகமாக இருந்தது. தமிழ் எழுத்துக்களின் மூலம் திருமறை விளக்கங்களைத் தரும் போது மாறுபாடாகக் கருத்து விளக்கம் ஒலிக் குறைபாட்டினால் அமைந்து விடலாம் என்ற உணர்வின் அடிப்படையிலேயே, திருக்குர்ஆனை, அதன் விளக்கங்களை நேரடியாகத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தமிழில் தருவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வந்தது