பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தமிழ் நாடும் மொழியும்


வீரராசேந்திரன்

வீரராசேந்திரன் கி. பி. 1063-லிருந்து 1070 வரை ஆண்டான். பட்டம் பெற்ற பின்பு இவன் ஈழத்தில் தோன்றிய ஒரு கிளர்ச்சியை நசுக்கினான். கி. பி. 1067 இல் கூடல் சங்கமம் என்ற இடத்தில் வைத்து சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனைத் தோற்கடித்தான். அதனால் ஆகவமல்ல கோலாகலன், வல்லபவல்லபன் என்ற பட்டப் பெயர்கள் அவனுக்கு ஏற்பட்டன.

வீரராசேந்திரன் தில்லைச் செல்வனுக்குச் சிவப்பு வைரக்கல் ஒன்று பரிசளித்தான். முதலாம் சோமேசுவரனின் இளவலாகிய விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசைப் பெறு வதற்காகச் சோழன் பெரிதும் உதவி செய்தான். அது மட்டுமல்ல ; அச்சாளுக்கியனுக்குத் தன் மகளையும் கொடுத்தான். இதனால் சோழ நாட்டுக்கு யாதொரு பயனும் இல்லை. வீரராசேந்திரன் கி. பி. 1070 இல் காலமானான். அவனுக்குப் பின்பு அவன் மகனான அதிராசேந்திரன் அரசனானான். ஆனால் இவன் பட்டமேறிய சில நாட்களிலே இறந்தனன். எனவே விசயாலயச் சோழன் பரம்பரை முடிவுற்றது என்னலாம்.

அதிராசேந்திரனுக்குப் பின்பு சோழ - சாளுக்கியப் பரம்பரை சோழ நாட்டை ஆளத் தொடங்கிற்று. அவ்வாறு வந்த பரம்பரையின் முதல் அரசன் முதற் குலோத்துங்கன் ஆவான். சில வரலாற்று ஆசிரியர்கள் குலோத்துங்கன் அதிராசேந்திரனைக் கொன்றே சோழநாட்டு அரசுரிமையைக் கைப்பற்றினான் என்பர். ஆனால் வரலாற்று வல்லுநரான சதாசிவப் பண்டாரத்தார் இக்கூற்றை மறுத்து, அதிராசேந்திரன் சில நாள் சோழநாட்டை ஆண்டான் என்றும், இறுதியில் நோய்வாய்ப்பட்டே இறந்தான் என்றும் தக்க சான்றுகளுடன் நிறுவி உள்ளார்.