பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

115


பதினொன்று ஆகிவிட்டது. இன்னும் நான் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும்!”என்றாள் சாஷா,

“எங்கே போகிறீர்கள்? நகருக்கா?” என்று வியப்புடன் கேட்டாள் தாய்.

“ஆமாம்.”

“எதற்காகப் போக வேண்டும்? ஒரே இருட்டாயிருக்கிறது. ஒரே ஈரம் களைத்துப் போயிருக்கிறீர்கள்! இரவு இங்கேயே தங்கிவிடுங்கள். இகோர் இவானவிச் சமையல் கட்டிலே தூங்கட்டும். நாமிருவரும் இங்கேயே படுத்துக்கொள்ளலாம்.”

“இல்லை. நான் போய்த்தானாக வேண்டும்” என்றாள் சாஷா,

“துரதிருஷ்டவசமாக, அவள் போய்த்தான் ஆக வேண்டியிருக்கிறது. அவளை இங்கு எல்லாருக்கும் தெரியும். நாளைக்குக் காலையில் அவளை யாரும் தெருவில் பார்த்துவிடக்கூடாது” என்றான் இகோர்.

“ஆனால் எப்படிப் போவது? தனியாகவா?”

“ஆமாம். தனியாகவேதான்!” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் இகோர்.

அந்தப் பெண் ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றினாள். ஒரு கறுத்த ரொட்டியின் மீது உப்பைத் தடவிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடும் போது தாயையும் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டாள்.

“நீங்களும் நதாஷாவும் எப்படித்தான் துணிந்து போகிறீர்களோ? நானாயிருந்தால் போகவே மாட்டேன், எனக்கு ஒரே பயந்தான்!” என்றாள் பெலகேயா.

“இவளுக்கும் பயம்தான்” என்றான் இகோர். “என்ன, சாஷா, பயந்தான், இல்லையா?”

“இல்லாமலிருக்குமா? பயம்தான் என்றாள் அந்தப் பெண்.

தாய் அவளையும் இகோரையும் பார்த்தாள்.

“நீங்கள் எல்லாம் என்ன பிறவிகளோ, அம்மா!” என்று அதிசயித்தாள் தாய்.

தேநீர் பருகி முடிந்தவுடன், சாஷா ஒன்றும் பேசாமல் இகோருடன் கைகுலுக்கிவிட்டு, சமையல் கட்டுக்குள் வந்தாள். தாயும் அவளைப் பின் தொடர்ந்தாள்.

“நீங்கள் பாவெலைப் பார்க்க நேர்ந்தால், நான் கேட்டதாகச் சொல்லுங்கள். மறந்துவிடாதீர்கள்” என்றாள் சாஷா.