பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

123


“நல்ல வார்த்தைக்கு என்ன காசா பணமா?” என்று சொல்லிக்கொண்டே அவன் ஒரு பக்கமாக ஒதுங்கிச் சென்றான்.

“சூடான சேமியா. சூப்” என்று கத்தினாள் பெலகேயா.

தன் மகனிடம் தனது பிரசுர விநியோகத்தின் முதல் அனுபவத்தை எப்படிச் சொல்வது என்பதைப் பற்றி அவள் யோசித்துப் பார்த்தாள். ஆனால் அவனது மனத்தாழத்தில் அந்தக் கோபாவேசமான புரிய முடியாத கடுகடுத்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியின் முகம்தான் நிழலாடிக் கொண்டிருந்தது. அவனது திருகிவிட்ட கரியமீசை நிமிர்ந்து நின்றது; இறுக மூடிய அவனது பற்கள் பிதுங்கிப்போன உதடுகளின் இடையே வெள்ளை வெளேரெனப் பளிச்சிட்டன. தாயி இதயத்தில் வானம்பாடியைப் போல் ஆனந்த உணர்ச்சி பாடித் திரிந்தது. அவன் தன் புருவங்களை வளைத்து உயர்த்தி, வந்து போகும் வாடிக்கைக்காரர்கள் அனைவரையும் பார்த்து, தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இதை வாங்கு, அதை எடு”.

16

அன்று மாலையில் அவள் தேநீர் பருகிக்கொண்டிருக்கும்போது வெளியே சக்தி தெறிக்க வரும் குதிரைக் குளம்புகளின் ஓசையும் அதைத் தொடர்ந்து ஒரு பழகிய குரலும் கேட்டது. அவள் துள்ளியெழுந்து கதவைத் திறப்பதற்காக சமையல் கட்டுக்குள் ஓடினாள். யாரோ வாசல் பக்கத்தில் அவசர அவசரமாக நடந்து வருவதாய்த் தெரிந்தது. அவளது கண்கள் திடீரென இருண்டன; அவள் கதவைக் காலால் தள்ளித் திறந்துவிட்டு, கதவு நிலைமீது சாய்ந்து நின்று கொண்டாள்.

‘வணக்கம் அம்மா!’ என்ற பழகிய குரல் கேட்டது; அதே சமயம் மெலிந்து நீண்ட கரங்கள் அவள் தோள்களில் மீது விழுந்தன.

அவளது இதயம் ஏமாற்றத்தால் கலங்கியது. அந்த ஏமாற்றத்தோடு அந்திரேயைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தமும் பொங்கியது. அந்த இரு உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று முயங்கி, ஒரு பேருணர்ச்சியாகத் திரண்டு அவளை மகிழ்ச்சி பரவசத்துக்கு ஆளாக்கி உந்தி எழச்செய்து, அந்திரேயின் தோள்மீது முகத்தைப் புதைத்துக் கொள்டாள். நடுநடுங்கும் கைகளோடு அவளை இறுக அணைத்துக்கொண்டான் அவன். தாய் அமைதியாக அழுதாள்; அவளது தலைமயிரைத் தடவிக் கொடுத்துக்கொண்டே சொன்னான் அவன்.