பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

133


"அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது. இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள்! ஆனால் நம்முடைய மானேஜர் சொன்னமாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான். இங்கே செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல, ஆனால் உழுது தள்ள வேண்டியதுதான்....”

வவீலவ் தனது கரங்கள் இரண்டையும் பிடரியில் கொடுத்துப் பிடித்துக் கொண்டவாறு நடந்தான்.

“ஏ நாய்க்குப் பிறந்தவனே! நீ போய் என்ன வேண்டுமானால் அச்சடித்துத்தள்ளு!” என்று உரத்த குரலில் சத்தமிட்டான். “ஆனால், என்னைப் பற்றி மாத்திரம் துணிந்து எதுவும் சொல்லிவிடாதே. ஆமாம்!”

வசீலி கூஸெவ் தாயிடம் வந்து சேர்ந்தான்.

“நான் இன்றைக்கு இரண்டாம் தடவையாக உன்னிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் போகிறேன். நல்ல சுவை!” என்று சொல்லிவிட்டு, தன் குரலைத் தாழ்த்தி, கண்களைச் சுருக்கி விழித்துக்கொண்டு, “அவர்களுக்குச் சரியான பொட்டிலே அடி விழுந்திருக்கிறது. நல்லவேலை, அம்மா, நல்லவேலை!” என்றான்.

அவள் அன்பு ததும்ப, தலையை அசைத்துக் கொண்டாள். தொழிலாளர் குடியிருப்பிலேயே பெரிய போக்கிரி என்று பேரெடுத்தவனான வசீலி அவளிடம் மிகவும் மரியாதையோடு நடந்து கொண்டதானது அவளுக்கு இன்பம் தந்தது. மேலும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள உத்வேகமும் அவளுக்கு அதிக இன்பத்தை அளித்தது. அவள் தனக்குத்தானே நினைக்கத் தொடங்கினாள்.

‘நான் மட்டும் இல்லாதிருந்தால்....”

மூன்று சாதாரணக் கூலியாட்கள் கொஞ்ச தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் அதிருப்தி தொனிக்கும் குரலில் அடுத்தவனிடம் மெதுவாகப் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது.

“என் கண்ணில் அது படவே காணோமே....”

“அதிலே என்ன எழுதியிருந்தது, என்பதைக் கேட்க எனக்கு ஆசை; நானோ எழுத்தறிவில்லாதவன். ஆனால், அது என்னவோ அவர்களைச் சரியான இடம் பார்த்து அடித்து விழத்தட்டியது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது” என்றான் இன்னொருவன்.