பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

147


"அவன் மிகவும் அடக்கமானவன்” என்று அவள் ஹஹோலிடம் சொன்னாள்; “எப்போதும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான்.....”

“ஆமாம்!” என்றான் ஹஹோல்: “அவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். அவர்கள் மரியாதை தவறமாட்டார்கள்.

சிரித்த முகத்தோடேயே பேசுவார்கள்; ஆமாம்! ‘இதோ ஒரு கண்ணியமான யோக்கியமான புத்தி நிறைந்த மனிதன் இருக்கிறான்; இவன் ஒரு பயங்கரமான ஆசாமி என நாங்கள் நினைக்கிறோம். எனவே, உங்களுக்குச் சிரமமில்லாவிட்டால், இவனை வெறுமனே தூக்கில் போட்டுவிடுங்கள்! போதும் என்று அவர்கள் சொல்வார்கள். அப்புறம் அவர்கள் சிரித்துக் கொண்டே அவனைத் தூக்கிலும் போட்டு விடுவார்கள். போட்ட பிறகும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்’.

“ஆனால் இங்கே சோதனைபோட வந்தானே ஒருத்தன். அவன் வேறு மாதிரிப் பேர்வழி. அவன் ஒரு பன்றிப் பிறவி என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துகொள்ளலாம்’ என்று சொன்னாள் தாய்.

“அவர்களில் யாருமே மனிதப் பிறவிகள் அல்ல. அவர்கள் மக்களைச் செவிடாக்கும் சம்மட்டிகள்தான் அந்தப் பிறவிகள். நம்மை மாதிரி, ஆட்களையெல்லாம் மட்டம் தட்டி, சீர்படுத்தி, கையாள்வதற்குச் சுலபமானவர்களாக நம்மை மாற்ற முனையும் கருவிகள் தான் அவர்கள். அவர்கள் நம்மை அதிகாரம் செய்யும் மேலிடத்தின் கைக் கருவிகளாக ஏற்கெனவே தம்மை மாற்றிக்கொண்டு விட்டவர்கள். தங்களுக்கு இட்ட எந்த ஆணையையும் எந்தவித முன்பின் யோசனையுமின்றி உடனே நிறைவேற்றி வைத்துவிடுவார்கள்’

கடைசியாக ஒரு நாள் அவளுக்குத் தன் மகனைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று சிறைச்சாலை ஆபிஸில் ஒரு மூலையில் அவன் மிகவும் பணிவோடு அடங்கி ஒடுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அட்டும் அழுக்கும் நிறைந்த அந்தத் தாழ்ந்த கூரை கொண்ட அறைக்குள்ளே வேறு பலரும் இருந்தார்கள். அவர்களும் கைதிகளைப் பார்ப்பதற்காகக் காத்துக் கிடப்பவர்கள்தான். அவர்கள் அங்கு அப்படிக் காத்துக் கிடப்பது அதுவே முதல் தடவை அல்லவாதலால். அங்குள்ள மனிதர்கள் நாளாவட்டத்தில் ஒருவருக்கொருவர் பழகிக்கொண்டுவிட்டார்கள்; எனவே சிலந்தி வலை பின்னுவதைப்போல அவர்கள் அமைதியாக ஒருவருக்கொருவர்பேசிக் கொண்டிருந்தார்கள்.

மடியிலே ஒரு ஜோல்னாப்பையோடு உட்கார்ந்திருந்த தொளதொளத்த முகம்படைத்த ஒரு தடித்த பெண்பிள்ளைபேசத்