பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

மக்சீம் கார்க்கி


வருகிற வழி’ என்று ஒரு விபரீதத் தொனியில் பேசினான் அவன். பிறகு பெலகேயாவின் கரத்தைப் பிடித்து மன நிறைவோடு குலுக்கிவிட்டு மேலும் சொன்னான்; ‘பாவெல் தன் வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னான்.”

அவன் மிகவும் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்தான். சோர்ந்து மங்கிய சந்தேகக் கண்களோடு அறையைச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான்.

முன்பெல்லாம் தாய்க்கு அவனைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அவனது விகாரமான மொட்டையடித்த தலையும், சின்னஞ்சிறு கண்களும் அவளை ஏனோ பயமுறுத்திக் கொண்டேயிருந்ததுண்டு. ஆனால் அன்றிரவிலோ அவனைப் பார்த்தபோது அவள் மகிழ்ச்சிக் கொண்டாள். அவனோடு பேசும்போது அன்பு ததும்பப் புன்னகை செய்தாள்.

“நீ எவ்வளவு மெலிந்துவிட்டாய்! அந்திரியூஷா, இவனுக்கு ஒரு குவளை நேநீர் கொடுப்போம்.”

“நான் தேநீர்ப் பாத்திரத்தை அப்போதே கொதிக்க வைத்தாயிற்றே” என்று சமையல் கட்டிலிருந்தவாறே பதில் கொடுத்தான் ஹஹோல்.

“சரி. பாவெல் எப்படி இருக்கிறான்? உன்னைத் தவிர வேறு யாராவது விடுதலையானார்களா?”

நிகலாய் தலையைத் தொங்கவிட்டான்.

“பாவெல் இன்னும் பொறுமையோடு காத்துக்கொண்டு தானிருக்கிறான். அவர்கள் என்னை மட்டும்தான் விடுதலை செய்தார்கள்.” அவன் தன் கண்களைத் தாயின் முகத்துக்கு நேராக உயர்த்தினான்; பற்களை இறுக கடித்துக்கொண்டு மெதுவாகப் பேசினான்; “நான் அவர்களிடம் சொன்னேன்! ‘போதும் போதும் என்னைப் போகவிடுங்கள். இல்லையென்றால் நான் இங்கேயே உங்களில் யாரையாவது கொன்று தீர்த்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று சத்தம் போட்டேன். எனவே அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள்.”

“ஆ!” என்று பின்வாங்கியவாறு அதிசயித்தாள் தாய். அவனது குறுகிய குறுகுறுத்த கண்களை அவளது கண்கள் சந்தித்தபோது அவள் தன்னையுமறியாமல் கண்களை மூடிக்கொண்டாள். ‘பியோதர் மாசின் எப்படியிருக்கிறான்? இன்னும் கவிதை எழுதிக் கொண்டுதான் இருக்கிறானா?” என்று சமையலறையிலிருந்தவாறே கத்தினான் ஹஹோல்.