உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

179


அந்தப் பெண்ணின் குரலிலிருந்த பயபீதியையும் தாபத்தையும் தாயால் உணர முடிந்தது. சாஷாவின் வார்த்தைகள் அவனது இதயத்தில் பனித் துளிகளைப்போல் குளிர்ந்து விழுந்தன.

“இல்லை, நான் யோசித்தாகிவிட்டது. எதுவும் என் உறுதியை மாற்றிவிட முடியாது” என்றான் பாவெல்.

“நான் கெஞ்சிக் கேட்டால் கூடவா?”

பாவெலின் குரல் திடீரென்று உத்வேகமும் கரகரப்பும் பெற்றது.

“நீங்கள் இது மாதிரிப் பேசக்கூடாது. ஊஹும் இப்படிப் பேசக்கூடாது நீங்கள்?”

“நானும் மனிதப் பிறவிதானே!” என்று மெதுவாகக் கூறினாள் அவள்.

“ஆமாம். அதிசயமான மனிதப் பிறவி!” என்று அவளைப்போலவே மெதுவாய்ச் சொன்னான் அவன். எனினும் அவனுக்குத் தொண்டை அடைபடுவதுபோலிருந்தது. “நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர். அதனால்தான் - அதனால்தான் - இந்த மாதிரி நீங்கள் பேசக்கூடாது”

“சரி, வருகிறேன்” என்றாள் அவள்,

அவளது காலடியோசையின் போக்கிலிருந்து அவள் அவசர அவசரமாய் ஓடுகிறாள் என்பதைத் தாய் உணர்ந்துகொண்டாள் பாவெல் அவளைத் தொடர்ந்து வெளி முற்றத்துக்குச் சென்றான்.

தாயின் இதயம் பயத்தால் குன்றிக் குறுகி வேதனைப்பட்டது. அவர்கள் எதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள் என்பது அவளுக்குப் புரியவில்லை; என்றாலும் தன்னைப் பொறுத்தவரையில் தனக்கு ஒரு பேராபத்து விளையப்போகிறது என்பதை மட்டும் அவள் மனதுக்குள் உணர்ந்தாள்.

“அவன் என்னதான் செய்ய விரும்புகிறான்?”

பாவெல் அந்திரேயோடு வந்து சேர்ந்தான்.

“ஐயோ, இஸாய், இஸாய்! அவனை என்னதான் செய்கிறது?” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.

“இந்த மாதிரிக் காரியத்தைக் கைவிட்டுவிட வேண்டும் என்று நாம் அவனை ஒருமுறை எச்சரிக்கத்தான் வேண்டும்” என்று முகத்தைச் சுழித்தவாறு சொன்னான் பாவெல்.

“பாவெல், நீ என்ன திட்டம் போடுகிறாய்?” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள் தாய்