பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

மக்சீம் கார்க்கி


கையால் சிலுவை கீறிவிட்டுப் பெருமூச்செறிந்தான். உயிரோடிருந்த காலத்தில் அவனைக் கண்டாலே அவளுக்கு வெறுப்புத்தான் தோன்றும்; இப்போதோ அவனுக்காக ஒருவித அனுதாப உணர்ச்சி அவன் உள்ளத்தில் தோண்றியது.

“இரத்தக் கறையையே காணோம்” என்று யாரோ தணிந்த குரலில் சொன்னார்கள். “இல்லை, முஷ்டியால் குத்தித்தான் கொன்றிருக்க வேண்டும்.”

“காட்டிக் கொடுக்கிற பயலுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தாகிவிட்டது!” என்று யாரோ ஒருவன் வக்கிரமாகச் சொல்லிக்கொண்டான்.

அந்த அரசியல் போலீஸ்காரன் பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னே சென்றான்.

“யாரது? யார் இப்படிச் சொன்னது?” என்று அவன் பயங்கரமாகக் கேட்டான்.

அதனது முன்னிலையில் ஜனங்கள் பயந்து கலைந்து சென்றார்கள். சிலர் ஓடியே போய்விட்டார்கள். யாரோ ஒருவன் வர்மத்தோடு சிரித்துக்கொண்டான்.

தாய் வீட்டிற்குத் திரும்பினாள்.

“அவலுக்காக யாருமே வருத்தப்படவில்லை” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் அவள்.

அவளது கண்களுக்கு முன்னால், நிகழாயின் தடித்த உருவம் தோன்றுவது போலிருந்தது. அவன் தனது ஈரமும் இரக்கமுமற்ற குறுகிய கண்களால் அவளை வெறித்து நோக்குவதுபோலவும் ஏதோ அடிபட்டுவிட்டதுபோல் வலது கையை நொண்டி நொண்டி வீசி வருவதுபோலவும் அவளுக்குப் பிரமை தட்டியது.

அந்திரேயும் பாவெலும் வந்தவுடனே. அவள் அவர்களிடம் அந்த விஷயத்தைப்பற்றி அவசர அவசரமாக விசாரித்தாள்.

“இஷரயைக் கொன்றதற்காக யாரையாவது கைது செய்திருக்கிறார்களா?”

“இதுவரை ஒன்றும் கேள்விப்படவில்லை” என்றாள் ஹஹோல்.

அவர்கள் இருவரும் மிகவும் மனம் கசந்துபோயிருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்துகொண்டாள்.

“யாராவது நிகலாயின் பேரை வெளியிட்டார்களா?” எனறு மெதுவாகக் கேட்டாள் தாய்.