பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

மக்சீம் கார்க்கி


“காட்டுமிராண்டி ஜனங்கள்.”

அவர்கள் போய்விட்டார்கள்.. தாய் ஜன்னலருகேயே நின்றாள்; அவளது கைகள் மார்பின் மீது குறுக்காகப் படிந்து பற்றியிருந்தன. அவள் தன் கண்களை இமை தட்டாமல், எதையுமே காணாமல், வெறுமனே விழித்துக்கொண்டு நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்திருந்தன. உதடுகள் இறுகியிருந்தன. கடைவாய்த் தாடைகள் இறுகி ஒன்றோடொன்று அழுத்திக் கடித்துக்கொண்டிருந்தன. அந்தக் கடியின் வேதனையையும் அவள் உணர்ந்தாள். மண்ணெண்ணெய் விளக்கில் எண்ணெய் வற்றி வறண்டது; திரி படபடத்துப் பொரிந்தது: சுடர் துடி துடித்தது. அவள் அதை ஊதியணைத்துவிட்டு, இருளிலேயே இருந்தாள், அவளது இதயத்தில் நிரம்பியிருந்த சூன்ய மயமான ஏக்க உணர்ச்சியால், அவளது இருதயத் துடிப்புக்கூடத் தடைப்பட்டது. அப்படியே அவள் வெகுநேரம் நின்றுகொண்டிருந்தாள். கண்களும் கால்களும் வலியெடுக்கும் வரை நின்றாள். மரியா ஜன்னலருகே வந்து போதை மிகுந்த குரலில் கூப்பிடுவதை அவள் கேட்டாள்;

“பெலகேயா, தூங்கிவிட்டாயா? பாவம், உனக்கு இப்படித் துன்பம் வரக்கூடாது. சரி, தூங்கு !”

தாய் தன் உடைகளை மாற்றாமலேயே போய்ப் படுத்துக்கொண்டாள், படுத்த மாத்திரத்திலேயே ஆழமான குளத்துக்குள் அமிழ்ந்து போவது போன்ற ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளானாள், அவள் கனவு கண்டாள்; நகருக்குச் செல்லும் ரஸ்தாக்கரையில், சேற்றுப் பிரதேசத்துக்கு அப்பால் தெரியும் ஒரு மஞ்சள் நிறமான மணற் குன்றிற்கருகே அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். தொழிலாளர்கள் மண்வெட்டி எடுக்கும் ஒரு செங்குத்தான குன்றின் ஓரத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான், அவன் அந்திரேயின் அமைதியும் இனிமையும் நிறைந்த குரலில், பாடிக்கொண்டிருந்தான்:

துயில்.
கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும்தோழர்காள்!

அவள் தன் நெற்றியை அழுத்திப் பிடித்தவாறு, தன் மகனைப் பார்த்துக்கொண்டே அந்தக் குன்றைக் கடந்து சென்றாள். நீலவானின் பகைப்புலத்தில் அவனது உருவம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் தோன்றியது. அவள் அவனருகே செல்ல நாணிக் கூசினாள். ஏனெனில் அவள் கர்ப்பமுற்றிருந்தாள்; அவளது கைகளில் இன்னொரு குழந்தை இருந்தது. அவள் மேலும் நடந்தாள்; நடந்து