உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

மக்சீம் கார்க்கி


கொஞ்சங்கூட ஈவிரக்கமின்றி மக்களையெல்லாம் அறைத்து நொறுக்கிப் பணமாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவள் உணருவாள். நிகலாய்க்கும் அந்திரேய்க்கும் பல விதத்திலும் ஒற்றுமை இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஹஹோலைப் போலவே இவனும் மக்களைப்பற்றிக் குரோத உணர்ச்சியற்றுப் பேசினான்; வாழ்க்கை அமைப்பிலுள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளியாகிறார்கள் என்றே இவனும் கருதினான். ஆனால் புதிய வாழ்க்கை மீது இவன் கொண்டுள்ள விசுவாசம் அந்திரேயினுடையதைப்போல் அவ்வளவு தீவிரமாகவோ தெளிவாகவோ காணப்படவில்லை. இவன் எப்போதும் ஒரு நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த நீதிபதியைப்போலத்தான் அடங்கி அமைந்த குரலில் பேசினான். மிகவும் பயங்கரமான விஷயங்களைப் பற்றிப் பேசும்போதுகூட அவனது உதடுகளில் ஒரு சிறு அமைதி நிறைந்த வருத்தப் புன்னகையே நிழலிட்டு மறையும். அந்தச் சமயங்களில் அவனது கண்களும் இளக்கமற்று வக்கிரத்தோடு பிரகாசிக்கும். அந்தக் கண்களில் உள்ள ஒளியைக் காணும்போதெல்லாம் அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றும். இந்த மனிதன் யாரையும் எதையும் மன்னிக்கவே மாட்டான்; இவனால் மன்னிக்கவே முடியாது என்று கருதத் தோன்றும். அவனுக்கே தனது இரக்கமற்ற இந்தத் தன்மை பிடிக்கவில்லை. எனவே அவனுக்காக அனுதாபப்பட்டாள் தாய். அவன் மீது அவள் கொண்டிருந்த பாசம் நாளுக்குநாள் வளர்ந்து வந்தது.

ஒன்பது மணிக்கு அவன் வேலைக்குப் புறப்படுவான். போன பிறகு, அவள் வீட்டையெல்லாம் சுத்தப்படுத்துவாள். பிறகு மத்தியான உணவைத் தயாரிப்பாள். குளித்துவிட்டு, தூய உடைகள் அணிந்து கொள்வாள், தன் அறைக்குள் வந்து உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டி அதிலுள்ள படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் இதற்குள்ளாகவே. புத்தகங்களைப் படிக்கத் தெரிந்துகொண்டிருந்தாலும், மிகுந்த சிரமத்தோடும் அதிக கவனத்தோடும் தான் அவளால் அவற்றைப் படிக்க முடியும். அப்படிப் படித்தாள் அவள் சீக்கிரமே களைப்புற்றுப் போவாள்; ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் உள்ள தொடர்பைக் கூட அவளால் உணர முடியாது. குழந்தை படங்களைப் பார்த்துக் குதூகலிப்பது போல அவளும் அப்படங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். அந்தப் படங்களில் அவள் ஒரு புதிய அற்புத உலகைக் கண்டாள்; தொட்டுணர முடிவது போன்ற அந்தப் புதிய உலகத்தை அவள் அந்தப் படங்களிலிருந்து புரிந்துகொண்டாள். அவளது கண்முன்னால் மாபெரும் நகரங்களும் அழகிய கட்டிடங்களும், யந்திரங்களும். கப்பல்களும், ஞாபகச் சின்னங்களும், இன்னும் மனிதக் கரங்கள் சிருஷ்டித்த எத்தனை எத்தனையோ பொருட்செல்வங்களும் தோன்றின;