பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

மக்சீம் கார்க்கி


இறங்கிய ஒரு சாம்பல் நிறக் கட்டிடமும் தெரிந்தன. அந்தக் கட்டிடம்தான் அந்தக் கிராமச் சாவடி வழுக்கைத் தலையும் தாடியும் கொண்ட ஒரு முஜீக் தனது சட்டைக்கு மேல் கோட்டு எதுவும் அணியாமல் அந்தக் கட்டிடத்து முசப்பில் உட்கார்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்தான். அந்தப் புல்வெளிச் சதுக்கத்தில் ஒரு பன்றி மேய்ந்துகொண்டிருந்தது. தனது காதுகளைப் படபடவென்று குலுக்கியாட்டிவிட்டு அது தன் மூஞ்சியைத் தரையில் மோதி, தலையை அசைத்தாட்டியது.

மேகக் கூட்டங்கள் ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கடுக்காய்ச் சேர்ந்து கறுத்த பெருந்திரளாகக் கூடி, பெருகின. எங்கும் அமைதியும், அசமந்தமும் ஆயாசமும் நிறைந்து, வாழ்க்கையே எதற்காகவோ காத்துக் கிடப்பதுபோலத் தோன்றியது.

திடீரென ஒரு குதிரைப் போலீஸ் ஸார்ஜெண்ட் அந்தப் புல்வெளி வழியாக கிராமச்சாவடியின் முகப்புக்கு வேகமாகக் குதிரையை ஒட்டிக்கொண்டு வந்து நின்றான். அவன் சாட்டையைக் காற்றில் வீசிச் சுழற்றியவாறே அந்த முஜீக்கை நோக்கிச் சத்தமிட்டான். அவனது கூச்சல் ஜன்னலில் மோதித் துடித்தது. எனினும் வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. அந்த முஜீக் துள்ளியெழுந்து எங்கோ தூரத்தில் கையைச் சுட்டிக் காட்டினான். ஸார்ஜெண்ட் குதிரையைவிட்டுத் தாவிக் குதித்து, கடிவாள லகானை அந்த முஜீக்கின் கையில் ஒப்படைத்து விட்டு, படிகளை நோக்கித் தடுமாறிச் சென்று அங்கிருந்த கம்பியைப் பற்றிப் பிடித்தவாறு. மிகுந்த சிரமத்துடன் மேலேறி உள்ளே சென்று மறைந்தான்.

மீண்டும் எங்கும் அமைதி நிலவியது. குதிரை தன் குளம்பால் தரையை இருமுறை உதைத்துக் கிளறியது. அறைக்குள் ஒரு யுவதி வந்தாள். அவள் தனது மஞ்சள் நிறமான கேசத்தைச் சிறு பின்னலாகப் போட்டிருந்தாள். அவளது உருண்ட முகத்தில் இங்கிதம் நிறைந்த கண்கள் பளிச்சிட்டன. உணவுப் பொருள்களைக்கொண்ட தட்டை எடுத்துச் செல்லும்போது, உதட்டைக் கடித்துத் தலையை ஆட்டினாள்.

“வணக்கம். கண்ணே!” என்றாள் தாய்.

“வணக்கம்!” அவள் அந்தத் திண்பண்டங்களையும், தேநீர்ச் சாமான்களையும் மேஜை மீது வைத்துவிட்டு, திடீரென்று பரபரக்கும் குரலில் சொன்னாள்:

“அவர்கள் இப்போதுதான் ஒரு கொள்ளைக்காரனைப் பிடித்தார்கள். அவனை இங்குக் கொண்டுவருகிறார்கள்!”

“யார் அந்தக் கொள்ளையன்?”