பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“என்னுடைய குழந்தைகள் செத்துப்போனதற்காக நான் கடவுளாகட்டும். மனிதனாகட்டும் இருவரையும் மன்னிக்க மாட்டேன், ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன்!”

பெலகேயா ஆர்வத்தோடு எழுந்தாள், அப்பெண்ணின் வார்த்தைகளால் சுருக்கென்று தைக்கும் வேதனையுணர்ச்சியைத் தனது இதயத்தில் உணர்ந்தாள்.

“நீங்கள் இன்னும் சின்னவர்தானே, உங்களுக்கு இனி மேலும் குழந்தைகள் பிறக்கும்” என்று அமைதியாகச் சொன்னாள்.

அந்தப் பெண் இதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பிறகு மெல்லிய குரலில் பதில் சொன்னாள்:

“ஒருக்காலும் நடக்காது. என்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறதாம். எனக்கு இனிமேல் குழந்தைகளே பிறக்காது என்று வைத்தியர் சொன்னார்.”

ஒரு சுண்டெலி தரையில் குறுக்கே விழுந்தோடியது. அந்த அமைதியை மின்னல் மாதிரி கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ படாரென்று ஒரு ஓசைசெயழுந்தது. மீண்டும் கூரையின் வைக்கோலில் எதையோ பயந்து நடுநடுங்கும் மெல்லிய விரல்களால் துழாவித்துழாவித் தேடுவதுபோல மழை பெய்தது: தண்ணீர் சொட்டுச் சொட்டாகத் தரையில் வழிந்து. அந்த இலையுதிர்கால இரவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்தது....

தூக்கக் கிறக்கத்திலும் தாயின் காதில் அந்த மெல்லிய காலடியோசை வாசற்புறத்தில் நெருங்கி வருவது கேட்டது. கதவை ஜாக்கிரதையுடன் திறந்துகொண்டு யாரோ உள்ளே நுழைந்தார்கள்.

“தத்யானா, நீ படுத்துவிட்டாயா?”

“இல்லை.”

“அவள் தூங்கிவிட்டாளா?”

“அப்படித்தான் தெரிகிறது.”

விளக்கின் சுடர் ஓங்கியது. ஒரு நிமிஷம் அந்த இருளில் திக்கித் திணறிப் படபடத்தது. அந்த முஜீக் தாயின் படுக்கையின் அருகே வந்து, தனது கோட்டை எடுத்து அவளது பாதங்களைப் பதனமாகப் போர்த்தி மூடினான். அவனது பணிவிடையின் எளிமை தாயின் உள்ளத்தைத் தொட்டுவிட்டது; அவள் புன்னகையோடு தன் கண்களை மீண்டும் மூடிக்கொண்டாள். ஸ்திபான் ஒன்றுமே பேசாமல் உடுப்புகளைக் கழற்றிவிட்டுப் பரணின் மீது ஏறிப்படுத்தான். மீண்டும் எங்கும் அமைதி நிலவியது.