உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

463


ஆனால் அந்தக் குதிரையோ முரட்டுத்தனமாக மேல்நோக்கித் தாவிக்குதித்தது! அந்தக் குதிரை தாவிக் குதிக்கும்போது எல்லாமே தாவிக்குதிப்பது மாதிரி இருந்தது. விசில் சப்தங்கள் இடைவிடாது அழுத்தமாக ஒலித்தன. அவற்றின் கீச்சுக் குரல்கள் தாயின் உள்ளத்திலே அபாய உணர்ச்சியைக் கிளப்பிவிட்டன. அவள் நடுங்கினாள். இடுகாட்டின் வேலிப்புறமாக, அந்தக் காவலாளிகளின் மீது ஒரு கண் வைத்தவாறே நடந்தாள். ஆனால், அந்தக் காவலாளிகளும் சிப்பாய்களும் சிறைச்சாலையின் வேறொரு மூலையைக் கடந்து மறைந்து சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் பித்தானிடப்படாத கோட்டோடு ஒரு மனிதன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன்தான் சிறைச்சாலை உபதலைவன் என்று அடையாளம் கண்டுகொண்டான். எங்கிருந்தோ போலீஸ்காரர்களும், பரபரக்கும் ஜனக்கூட்டமும் கூடிவந்தார்கள்.

குதூகலத்தோடு சுற்றியாடுவதுபோல் காற்று சுழன்று வீசியது. காற்றுவாக்கில் தாயின் காதுகளில் உடைந்து கலகலக்கும் கூச்சல்களும், விசில் சப்தங்களும் ஒலித்தன....... இந்தக் குழப்பத்தைக் கண்டு தாய் குதூகலமடைந்தாள். தனது நடையை எட்டிப் போட்டு நடந்தவாறே சிந்தித்தாள்.

“அவனும் கூட இப்படிச் சுலபமாய்த் தப்பி வந்திருக்கக்கூடும்!” திடீரென்று ஒரு மூலையிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் ஓடிவந்தார்கள்.

“நில்” என்று அவளை நோக்கி ஒருவன் மூச்சு வாங்கியவாறே கத்தினான். “தாடிக்கார மனுஷன் ஒருவனை நீ பார்த்தாயா?”

அவள் தோட்டமிருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினாள்.

“அவன் அந்தப் பக்கமாகத்தான் ஓடினான்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள், “ஏன்?”

“இகோரவ்! விசிலை ஊது!”

தாய் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் எதற்காகவோ வருத்தப்பட்டாள். அவளது மனத்தில் கசப்பும் வருத்தமும் கலந்த உணர்ச்சி தென்பட்டது. வெட்ட வெளியைக் கடந்து தெருவுக்குள் வந்தபோது அவளைக் கடந்து ஒரு வண்டி சென்றது. அந்த வண்டிக்குள் அவள் பார்த்தாள். அதற்குள் வெளிர் மீசையும், வெளுத்துச் சோர்ந்த முகமும் கொண்ட ஓர் இளைஞனைக் கண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவன் பக்கவாட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.

எனவே அவனது இடது தோளைவிட வலது தோள் உயர்ந்து காணப்பட்டது.