பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மக்சீம் கார்க்கி


ரீபினும் பாவெலும் தனியாக மட்டும் இருக்க நேர்ந்தால், அவர்கள் மூச்சுவிடாமல், முடிவில்லாமல் விவாதம் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். எனினும் விவாதம் செய்யும்போது அவர்கள் தங்கள் நிதானத்தை இழந்து உணர்ச்சி வசப்படுவதில்லை. தாய் விவாதத்தை ஆர்வத்தோடு கேட்பாள்; அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதை அறிய அரும்பாடுபட்டுக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்பாள். சமயங்களில் அகன்ற தோளும் கரிய தாடியும்கொண்ட ரீபினும், நெடிது வளர்ந்த பலசாலியான தன் மகனும் கண்மூடித்தனமாக, குருடாகப் போவதாக அவளுக்குப் படும். அவர்கள் முதலில் ஒரு திசையில் செல்வார்கள். பிறகு மறு திசைக்குச் செல்வார்கள். போக்கிடம் தெரியாது. பிரச்சினைக்கு மார்க்கம் காணாது அவர்கள் கையால் நிலந்தடவிச் செல்வதாக, ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு மாறுவதாக, தாம் செல்லும்போது தமது கைப்பொருளைத் தவறவிட்டு, அவற்றைக் காலால் மிதித்துக்கொண்டு நடப்பதாகத் தோன்றும். அவர்கள் எங்கெங்கோ மோதிக்கொண்டார்கள், எதை எதையோ தொட்டு உணர்ந்துகொண்டார்கள்; தங்களது கொள்கையையும் நம்பிக்கையையும் இழந்துவிடாமல் எதை எதையோ தூக்கிவிட்டெறிந்தார்கள்...

அவர்கள் எத்தனை எத்தனையோ பயங்கரமான, துணிச்சலான வார்த்தைகளைக் கேட்டுப் பழகுவதற்கு அவளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். என்றாலும், அந்த வார்த்தைகள் ஆரம்பத்தில் அவளைத் தாக்கி உலுக்கியதுபோல், பின்னர் உலுப்பவில்லை. அந்த வார்த்தைகளை உதறித்தள்ள அவள் கற்றுக்கொண்டுவிட்டாள். சமயங்களில் கடவுளை மறுத்துச் சொல்லும் வார்த்தைகளில்கூட, கடவுள் நம்பிக்கை தொனிப்பதை அவள் கண்டாள். அப்படிக் காணும்போது அவள் அமைதியாக, எல்லாவற்றையும் மறந்து, மன்னித்துத் தனக்குத் தானே சிரித்துக்கொள்வாள். அவளுக்கு ரீபினைப் பிடிக்காவிட்டாலும், இப்போது அவள் உள்ளத்தில் அவன் பகைமை உணர்ச்சியைக் கிளப்பவில்லை.

ஒவ்வொரு வாரமும் அவள் வெளுத்த துணிமணிகளையும், புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு, ஹஹோலிடம் கொடுப்பதற்காகச் சிறைக்குச் செல்லுவாள். என்றாலும் ஒரே ஒரு தடவைதான் ஹஹோலைக் கண்டு பேச அவளை அனுமதித்தார்கள்.

திரும்பி வந்தபோது அவனைப்பற்றி அன்போடு அவள் பேசினாள். “அவன் கொஞ்சங்கூட மாறிவிடவில்லை, எல்லோரிடமும்