பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக்கியோன் முன்னுரை


1930ல் தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு என்ற பெயரோடு இந்நூலை எழுதினேன்.

இதை, அப்போது சுயமரியாதைக் கொள்கையைப் பரப்புவதில் எனக்கு உற்ற துணையாயிருந்தவரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று கருதப்பட்டவருமாகிய தோழர் ம. நோயேல் (புதுவை) அவர்கள் இதை வெளியிட்டுப், பெருமக்கட்கு உதவினார்கள்.


வெளியிட்டவர் முன்னுரை


இந்நூலிற் காணப்படும் பாடல்கள் அனைத்தும் இனிமை உடையவை; இவற்றின் அடிகள் ஒவ்வொன்றும் சுருங்கியமைந்த விரிந்த விஷயத்தை விளக்குகின்றன; எளிய நடை.

"தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு" என்னு மிந்நூலைப் பாரதிதாசன் இயற்றிக் காண்பித்தார்கள்; கண்டதும் எனக்கோர் ஆச்சரிய உணர்ச்சியுண்டாயிற்று; இந்நூலை அச்சிட்டுச், சொற்பவிலைக்குத் தந்து மக்கள் அனைவர்க்கும் பயன்படுத்த முன் வந்தேன்.

இப் புத்தகத்தை மக்கள், ஆத்திசூடி கொன்றைவேந்தன் முதலிய நூற்கள் போல் பாராயணம் செய்து இதன் கருத்துக்களை ஓர் ஆயுதமாகக்கொண்டு முன்னேற வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

ஆதலின் மக்கள் அனைவரும் இதைப்பெற்று, வாசித்து நலன் அடைய வேண்டுகிறேன்.

ம. நோயேல் புதுவை.