பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௯௯


அவற்றுள் சிலவற்றை அந்நிலையில் அவர்கள் அழகுறப் பாடிய கருத்துகள் நோக்கியும், அவர்களின் வறுமைக் கொடுமைகளை அறிதல் வேண்டியும் கீழே காண்போம். இவை வெறும் இட அடைப்புக்காகத் தரப்பெறுவன அல்ல. அவற்றிலுள்ள கருத்துகளை நாம் ஒவ்வொரு வரும் அறிதல், நம் புலமை வரலாறு தெரிவதன் கடமையாகும். இலக்கியமே வாழ்வு; வாழ்வே இலக்கியம் என்பதற்கு இவை அழுத்தமான சான்றுகளாகும். அத்துடன் இவை நம் திருவள்ளுவப் பேராசானின் பெருமிதத்தையும், தன்மானத்தையும், எவர்க்கும் எதற்கும் என்றும் ஒருவரையும் சார்ந்திராத மதுகையையும், தாமே உழைத்து, ஏழைமை உணவாயினும் உண்டு, தன்முயற்சியொடு கூடிய தன்னுணர்வையும், தன்னறிவையும் கொண்டு தம் வாழ்வு முழுவதையுமே பொதுமைக்கு உளதாக்கிய வீறு குறையாத உரிமை வாழ்வையும், நாம் இப்புலவர் பெருமக்களின் வாழ்க்கை முயற்சிகளுக்கிடையில்தான் பளிச்சென்று உணர்தல் இயல்வதாகும் என்க. எனவே, கீழ்வரும் பாடல்களைக் கட்டாயம் தவிர்துவிடாமல் ஒரு வரியும் விடாது, விளங்குகிற வரை விளங்கிக்கொண்டு, மேலும் விளக்கம் வேண்டின் அந்நூல்களையே துணைக்கொண்டு, இஃதொரு நல்வாய்ப்பென்று அறிந்து அமைந்து செல்ல வேண்டிக் கொள்கின்றோம்.
கீழ்வரும் பாடல்களில் நமக்குத் தேவையான மிகவும் இன்றியமையாத அடிகள் மட்டுமே காட்டப் பெற்றுள்ளன. அவற்றுள்,
1) புலவர்களின் வறுமைச் சூழல், அவற்றின் கொடுமை,
2) அதனால் அவர்கள் வள்ளல்களையும், செல்வர்களையும் வேளிர்களையும், சிற்றரசர்களையும், பேரரசர்களையும் அண்டிய முறைகளும் பாடிப் புகழ்ந்த தன்மைகளும்,
3) அவர்களின் புலமைத் திறம்,
4) அத்தகு வறுமையிலேயே வதங்கி வாடியதால்,அவர்கள் பொதுமக்களின் நலம் நாடாத தன்மை,
5) இச் சூழ்நிலைகளால், அற்றை வீழத் தொடங்கிய இத் தமிழ் மொழியைப் பற்றியும் இனத்தைப் பற்றியும் கவலைப்படாமல் போன இயலாமை
-ஆகிய உண்மைகளெல்லாம் நன்கு புலப்படுத்தப் பெற்றிருக்கின்றன. இனி, இன்னொன்று, நாம் புலமையிற் பேராற்றலர் என்று அறிந்துள்ள பெரும்புலமைப் பெருமக்களெல்லாம், தம் வறுமையின் பொருட்டும் அதன் தாக்கத்தாலும், செல்வர் அல்லது அரசர் பிறரை எத்துணையளவு கீழிறங்கிப் பாடவேண்டியிருக்கின்றது என்னும் இழிதகையையும்,