பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬௦

முன்னுரை


பகுப்புகள், குறள் வைப்பு முறைகள், அதிகாரத் தொடர்புக்கும், குறட்பாக்களின் வைப்பு முறைக்கும் தரப்பட்ட செயற்கையான (பரிமேலழகர்) விளக்கங்கள், வரலாற்றுச் சூழலால் ஏற்பட்ட பொருள் திரிபும், நூல் மறைப்பும், நூற்றுக்கணக்கான பாட பேதங்களும், திருவள்ளுவரால் உருவாக்கப்பட்ட நூலமைப்பு, பகுப்பு, பாடலடைவு கொண்ட முழுமையான மூலத் திருக்குறள் நமக்குக் கிடைக்கவில்லை என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றன.”

-இவ்வாறு அறிஞர் கு.ச. ஆனந்தன் தம் திருக்குறள் உண்மைப் பொருள் - என்னும் நூலில் பலவாறாகக் கூறிச் செல்கிறார்.

திருக்குறள் நூலுக்கு வாய்த்த இக்கால உரையாசிரியர்களுள், அதற்கு மிகுந்த தாக்கத்தையும் அதே பொழுது சிற்சில் ஆக்கத்தையும் தந்தவர் அறிஞர் கு.ச. ஆனந்தன் அவர்கள் என்பது, நம் கருத்தாகும். அவருடைய உரை நூலின் ஆராய்ச்சி முன்னுரைகள் மிகவும் விழிப்புணர்வுடன் எழுதப்பெற்றுள்ளன. அவர் நூலின் முகவுரையுள் குறிப்பிடும் ஆய்வுரைகள் மிகவும் பயனுடையன. பற்பல பொருள் விளக்கங்களைக் கொண்டு திகழ்வன. ஏனோ தானோ என்றெழுதிவிடாமல், மிகவும் கண்ணும் கருத்துமாக அரிமா நோக்கில், மிகுந்த மக்கள் நல உணர்வுடன் அவற்றை எழுதியுள்ளார். இவ்வகையில் இவரைப் பெரிதும் பாராட்டலாம். ஆனால், முந்தைய உரையாசிரியர்கள் பற்றி அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அறிந்தோ அறியாமலோ அவரும் ஆட்பட்டிருப்பது ஒரு வருந்தத்தக்க செய்தி என்பதைப் புலப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

ஒருநூல் தெள்ளத் தெளிவான-முறை வைப்பான மூலத்தில் கிடைத்தாலுமே, அந்நூலாசிரியர்க்கும் உரையாசிரியர்க்கும் இடையிட்ட கால வேறுபாட்டால், அவரின் தந்துரை, நூலாசிரியரின் கருத்தை முழுமையாகக் கூறிவிட முடியும் என்பது மனவியலுக்கும், அறிவியலுக்கும் மாறுபட்ட செய்தி. ஒரு பொருள் அல்லது ஒர் இயற்கைக் காட்சி, பல படப்பிடிப்புக் கருவிகளைக் கொண்டு, படப்பிடிப்பாளர்கள் பலரால், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு கோணங்களில், படப்பிடிப்புச் செய்யப் படும்பொழுது, பதிவாகும் படங்கள் ஒன்று போலவே இருத்தல் இயலாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, அவ்வுரைகாரர்களின் உரை வேறுபாடுகளிலும் இருக்கும் என்பதும். ஆனால், அவற்றுள் அப்பொருளுக்கும், அல்லது காட்சிக்கும் ஒத்த அல்லது பொருந்திய படம் ஒன்றோ இரண்டோ இருப்பதுபோல் அவ்வுரைகாரர்களின் உரைகளிலும் ஒன்றோ இரண்டோ ஓரளவு பொருந்தியதாகவும் உண்மையாகவும் இருக்கலாம் அன்றோ? ஆனால், அத்தனை உரைகாரர்களின் உரைகளுமே சரியில்லை, தாம் கொள்கின்ற அமைப்பே, காணுகின்ற கருத்தே நூலாசிரியரின் அமைப்புக்கும், கருத்துக்கும் பொருந்தியதாக இருக்க முடியும் என்பது எப்படிச் சரியாகும்?

பற்பல அகப்புறச் சிதைவுகளுக்கும், அமைப்பு மாற்றங்களுக்கும் உட்பட்-