பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௫௯


கற்று மகிழ்வும் பயனும் பெறுவதை ஒரு நோக்கமாகக் கருதுவார்களாக.

மேலும், இஃது ஓர் அறநூலும் ஆகும்.

உலகியல் அறக் கூறுகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவற்றைச் செய்து உயிர்நலம்பெற விரும்புவர், இந்நூலைத் தவறாது, பிற அறநூல்களுடன் ஒப்பவைத்துக் கற்று, இதன் பொதுமையறத்தை உணர்ந்துகொண்டு, அதன்வழி நடந்து வாழ்வியற் பயனும், புகழும் பெறுவதுடன், உலகோர்க்கும் அறிவித்து அதனைக் கடைப்பிடிக்கச் செய்தலும் வேண்டும்.

அடுத்து, இஃதொரு வாழ்வியல் நூலும் ஆகும்.
- இதனை நன்கு கற்று நுட்பங்களை உணர்ந்து, ஒவ்வொருவரும் தம்தம் வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் செல்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழ இது கட்டாயம் வழிகாட்டுவதாகும்.
இனி, இஃதோர் அரசியல் நூலும் ஆகும்.
- அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள் கட்டாயம் இதில் கூறப்பெறும் அரசியல் நுட்பங்களைக் கற்றுணர்ந்து, ஆட்சியியலை அறிந்து, மக்கட்கு நலஞ் செய்யும் பயனுடைய ஆளுமையைச் செய்ய முயற்சி செய்ய இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மற்று, இஃதொரு பொருளியல் நூலும் ஆகும், என்க.
- என்னை? சமநிலைப் பொதுவுடைமைப் பொருளியல் அமைப்பை மக்களிடம் ஏற்படுத்த விரும்புபவர்கள், இதில் கூறப்பெறும் பொருளியல் உண்மைகளை உணர்ந்து, அவற்றின் வழி, தாங்கள் பொருளை ஈட்டவும், பேணவும், அதைப் பிறர்க்கும் பயன்படும்படியான பொதுமைப் பொருளியல் கொள்கைகளை வகுக்கவும், இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இனி, இஃதொரு குமுகவியல் (சமுதாய) நூலும் ஆகும்.
- சாதி, சமய வேறுபாடற்ற சமநிலைக் குமுகாய அமைப்பை உருவாக்கவும், இக்கால் உள்ள ஏற்றத் தாழ்வான குமுக நிலைகளில் சீர்திருத்தம் செய்யவும் விரும்பும் குமுகாயப் பொதுநலத் தொண்டர்கள் இதனை அறக்கற்று, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளுக்கு இதன் கருத்துகளை நன்கு பயண்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்து, திருக்குறள் ஓர் ஒழுக்கநெறி நூலுமாகும்.